Chennai: குட்கா விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் 32 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் தெரிய வந்துள்ளது. மதுரவாயலில் உள்ள முன்னாள் ஆணையர் ஜார்ஜ் வீடு, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, தமிழக டிஜிபி டி.கே.கஜேந்திரனின் முகப்பேர் வீடு மற்றும் பல காவல்துறை அதிகாரிகள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உயர் நீதிமன்றம், குட்கா விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது. குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை இருப்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர் குட்கா அதிபர் மாதவ ராவிடம் விசாரணை நடத்திய சிபிஐ, அவரது கிடங்கிற்கு சீல் வைத்தது. குட்கா அதிபர் மாதவ ராவிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் ஏராளமான போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பெயர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அந்தப் பெயர்களின் அடிப்படையில் ஏராளமானோரின் வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை செய்து வருவதாக தகவல்.
தடை செய்யப்பட்ட குட்கா போன்ற பொருட்களை கள்ளச் சந்தையில் விற்பதற்காக போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பல கோடி ரூபாய் லஞ்சப் பணம் தரப்பட்டதாக சோதனை நடத்தும் ஒரு அதிகாரி கூறியுள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு, வருமான வரித் துறையினர் மாதவ ராவ் அலுவலகத்தில் சோதனையிட்டு அவரின் டைரியை கைப்பற்றிய போது, அதில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு 40 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சப் பணம் கொடுக்கப்பட்டதற்கான தகவல் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
சிபிஐ நெருக்கமான வட்டாரங்கள், ‘திடீரென்று இவ்வளவு பெரிய ரெய்டு சிபிஐ நடத்துகிறது என்றால், கண்டிப்பாக எதாவது பெரிய ஆதாரம் சிக்கியிருக்கும்’ என்று கூறுகின்றன.