சேலம்:சேலம் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரிடமிருந்து வலியுறுத்திப் பெறப்பட்ட உடல் உறுப்புகள் வெளிநாட்டு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டதில் மோசடி நடந்ததுள்ளது விசாரணையில் உறுதியாகியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கடந்த மே 18-ந்தேதி விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட சாலைவிபத்தில் சிக்கி காயமடைந்தார். சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அடுத்த இரண்டு நாட்களில் மூளைச்சாவு அடைந்தார்.
மணிகண்டனிடமிருந்து பெறப்பட்ட இதயமும், நுரையீரலும் விதிகளை மீறி வெளிநாட்டு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்ட நுரையீரல் அங்கு காத்திருப்புப் பட்டியலில் இருந்த 5 உள்ளூர் நோயாளிகளுக்கு வழங்கப்படாமல் இஸ்ரேல் நாட்டு நோயாளிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சரும், பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ், ஆட்சியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் துணையுடன் இந்த முறைகேடுகள் நடந்துள்ள நிலையில், உடலுறுப்பு மாற்று ஆணையமும் துணை சென்றுள்ளது. இதன் மூலம் குற்றவாளிகள் அனைவரும் தப்பிக்க வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
மேலும், உடல் உறுப்புகளை உள்ளூர் ஏழை நோயாளிகளுக்கு வழங்காமல், பணத்திற்காக வெளிநாட்டு நோயாளிகளுக்கு விற்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதை சில மருத்துவமனைகளும், மருத்துவர்களும் வணிகமாக்கியுள்ளனர். கடந்த ஓராண்டில் மட்டும் வெளிநாடுகளைச் சேர்ந்த 95 பேருக்கு 127 உறுப்புகள் விதிகளை மீறி பொருத்தப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை எந்த மருத்துவமனை மீதும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார். அறுவை சிகிச்சைக்காக வெளிநாட்டு பயணிகளிடமிருந்து ரூ.12 கோடி வசூலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார்.
உடல் உறுப்பு மோசடியைத் தடுத்து நிறுத்தி, இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தண்டிக்க வேண்டியது அவசியம் என்றும் இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)