சென்னையை மையமாகக் கொண்டு செயல்படும் எஸ்.எல்.ஓ இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அரன் ஸ்டீல்ஸ் நிறுவனம், 201 கோடி ரூபாய் அளவுக்கு பணமோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஐ, அந்நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
கார்பரேஷன் வங்கிக்கு 201 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்படுத்தியுள்ளதாக எஸ்.எல்.ஓ நிறுவனம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சிபிஐ, நிறுவனத்தின் நிர்வாகிகளுக்குச் சொந்தமான 5 இடங்களில் சோதனையிட்டனர்.
இதைப்போலவே ஐதராபாத்தை மையமாக வைத்து செயல்படும் விஎம்சி சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனம் மீதும் பணமோசடி வழக்குப் பதிவு செய்துள்ளது சிபிஐ. பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு 539 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியுள்ளதாக விஎம்சி நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் இயக்குநர் உப்பால்பட்டி வெங்கட் ராமா ராவ் மற்றும் மேலாளர் உப்பால்பட்டி ஜிமா பிந்து ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது சிபிஐ.
விஎம்சி நிறுவனத்துக்குச் சொந்தமாக சென்னையில் இருக்கும் 3 இடங்களிலும் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.