This Article is From Oct 09, 2018

ஸ்டெர்லைட் கலவரம் குறித்த வழக்கு: சிபிஐ விசாரணை ஆரம்பமானது!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது தொடர்பாக, சிபிஐ, விசாரணையை ஆரம்பித்துள்ளது

ஸ்டெர்லைட் கலவரம் குறித்த வழக்கு: சிபிஐ விசாரணை ஆரம்பமானது!

தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது தொடர்பாக, சிபிஐ, விசாரணையை ஆரம்பித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே 22, 23 ஆம் தேதிகளில் நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. இதில் போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூட உத்தரவிட்டது. தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.

அதில், சுற்றுச்சூழல் சீர்கேடுகள் குறித்து ஆய்வு செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி, தருண் அகர்வால் தலைமையில், குழு ஒன்றை அமைத்து ஆறு வார காலத்திற்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டது. அதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இது ஒரு புறமிருக்க, போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆகஸ்ட் 14-ல், சிபிஐ புகார் குறித்து விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன் பேரில் நேற்று தனது விசாரணையை சிபிஐ ஆரம்பித்துள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.