சாத்தான்குளம் இரட்டை படுகொலை நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
New Delhi: சாத்தான்குளம் இரட்டைப் படுகொலை தொடர்பான வழக்கை சிபிஐ எடுத்துக் கொண்டு, விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த தகவலை தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விசாரணைக்காக சிறப்பு குழுக்கள் சிபிஐயில் அமைக்கப்பட்டுள்ளன. தமிழக காவல்துறையை சேர்ந்த பணியாளர்கள் சிலர் ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்துவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக சிபிஐயின் செய்தி தொடர்பாளர் ஆர்.கே. கவுர் கூறுகையில், 'சாத்தான்குளத்தில் வியாபாரிகள் 2 பேர் லாக் அப்பில் உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று சிபிஐ இந்த நடவடிக்கையை எடுத்தது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் குற்ற வழக்கு எண் 649/2020 மற்றும் 650/2020 ஆகியவற்றை சிபிஐ பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது' என்று கூறியுள்ளார்.
சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த மாதம் 19-ம்தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். சிறையில் வைத்து அவர்கள் போலீசாரால் சித்ரவதை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில் கடந்த மாதம் 22-ம்தேதி ஜெயராஜும், 23-ம் தேதி பென்னிக்சும் படுகாயங்களுடன் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
நாடு முழுவதும் இந்த இரட்டை படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், இருவர் உயிரிழந்தது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது.
முதலில் விசாரணை நடத்திய மாநில சிபிசிஐடி போலீசார், வழக்கில் தொடர்புடைய எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்பட 5 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் அடுத்த கட்டமாக வழக்கை சிபிஐ எடுத்துக்கொண்டு விசாரணையை தொடங்கியுள்ளது. இதில் மேலும் பல உண்மைகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.