சிபிஐ இயக்குநர்கள் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் அருண் ஜெட்லி
New Delhi: சிபிஐ இயக்குநர் அலோக் குமார், சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோரை கட்டாய விடுப்பில் செல்லுமாறு உத்தரவிட்ட மத்திய அரசு, சிபிஐ இடைக்கால இயக்குநராக எம்.நாகேஸ்வர ராவை நியமித்தது. இந்நிலையில், இந்த நடவடிக்கைக்கு எதிராக அலோக் குமார் வர்மா, உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை மனு தாக்கல் செய்தார். அதில், முக்கிய வழக்குகளை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த மனு மீது தலைமை நீதிபதி ரஞ்சய் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கௌல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ இயக்குநர் அலோக் குமார் வர்மா தாக்கல் செய்த மனு மீது மத்திய அரசு, சிபிஐ பதிலளிக்க வேண்டும்.
சிபிஐ இயக்குநர் மற்றும் சிறப்பு இயக்குநர்களின் பரஸ்பரக் குற்றச்சாட்டுகள் மீது மத்திய விசாரணை ஆணையம் நடத்தும் விசாரணையை 2 வார காலத்துக்குள் நடத்தி முடித்து, அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக் விசாரணையை நேரில் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்திருந்தது.
இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண் ஜெட்லி, விசாரணைக்கு இரு வார கால அவகாசம் அளித்து நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவானது வரவேற்கத்தக்க ஒன்றாகும். இதன்மூலம் விசாரணையின் நேர்மைத்தன்மை உறுதிப்படுத்தப்படும். ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி நியமிக்கப்பட்டிருப்பது நியாயமான விசாரணை நடைபெறுவதை உறுதி செய்யும்.
சிபிஐ மீதான நம்பகத்தன்மையை பேணும் நோக்கத்திலேயே மத்திய அரசு செயல்பட்டிருக்கிறது. குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் தலைமையில் சிபிஐ இயங்குவது சரியில்லை என்பதால் தலைமையில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து, சிபிஐ சீசரின் மனைவியை போன்றது என்ற அமைச்சர் ஜெட்லி, சந்தேகத்துக்கு இடம்கொடுக்காதவர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டிய இடம் அது. அதில் யார் குறித்து சந்தேகம் என்று வந்தாலும் அது சிபிஐ மீதான நம்பகத்தன்மையை குலைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.