சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மற்றும் இணை இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இடையே அதிகாரப்போர் நடந்து வருகிறது.
New Delhi: லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் சிபிஐ அமைப்பின் இணை இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இன்று நீதிமன்றத்தில் தன்னை கைது செய்யும் நடவடிக்கையில் இருந்து பாதுகாக்குமாறு கேட்டுக் கொண்டார். வரும் திங்கள் வரை அவர் கைதாக மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த கட்டமாக விசாரணை நடக்கும்போது அதில் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா நேரில் ஆஜர் ஆக வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அஸ்தானா தரப்பில் ஆஜர் ஆன வழக்கறிஞர், அஸ்தானா கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சிபிஐ அதிகாரப்போர் தொடர்பான 10 தகவல்கள்
1. சிபிஐ-ன் முதல் தகவல் அறிக்கைக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் ராகேஷ் அஸ்தனாவும், கைது செய்யப்பட்டுள்ள தேவேந்திர குமாரும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
2. இறைச்சி ஏற்றுமதியாளர் மொய்ன் குரேஷி மீதான வழக்கை நீர்த்துப் போகச் செய்வதற்காகத்தான் சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளதாக அஸ்தனாவின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.
3. மொய்ன் குரேஷி வழக்கில் தேவேந்திர குமாருக்கு தொடர்பிருப்பதாக சிபிஐ தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவரை 10 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ அனுமதி கேட்டுள்ளது.
4. அஸ்தனா மீது ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 13(1)டி-ன் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த சட்டப்பிரிவு தற்போது நடைமுறையில் இல்லை. தற்போதுள்ள நடைமுறையில் அஸ்தனா பொருளாதார ரீதியில் பலன் பெற்றதாக அதிகாரிகள் நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் அஸ்தனா மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்த முடியாது.
5. அலோக் வர்மாவும், அஸ்தனாவும் பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளனர். கடந்த வாரம் பிரதமர் மோடியை சந்தித்த அலோக் வர்மா அஸ்தனாவை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் கடிதம் எழுதியுள்ளார்.
6. சிபிஐ அதிகாரிகளுக்குள் நடந்து வரும் மோதல் குறித்து ரா தலைவர் அனில்தஸ்மனாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார். அஸ்தனாவுக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையில் மூத்த ரா அதிகாரி சமந்த் கோயலின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
7. சதிஷ் சனா என்கின்ற ஐதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அளித்த புகாரின் பேரில் தான் ராகேஷ் அஸ்தானா மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது சிபிஐ. சனாவை சிபிஐ பணமோசடி வழக்கில் விசாரித்து வருகிறது.
8. சனா, சில நாட்களுக்கு முன்னர் நீதிபதி முன்னர் ஆஜராகி, டிசம்பர் 2017 முதல் அக்டோபர் 2018 வரை, அஸ்தானாவுடன் தொடர்பு வைத்திருக்கும் இடைத்தரகரிடம் லஞ்சப் பணம் கொடுத்ததாக ஒப்புக் கொண்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
9. சனாவின் வாக்குமூலத்தை அடுத்து, இடைத்தரகரான மனோஜ் பிரசாத் கடந்த 16 ஆம் தேதி துபாயிலிருந்து விமானம் மூலம் வந்த போது கைது செய்யப்பட்டார்.
10. அஸ்தானா, சதிஷ் சனாவை விசாரிக்கும் போது, அவர், ‘சிபிஐ இயக்குநருக்கு லஞ்சம் கொடுத்ததை ஒப்புக் கொண்டதாக' அரசுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டை சிபிஐ தரப்பு மறுத்துள்ளது.