This Article is From Feb 05, 2019

மத்திய அரசுடன் மல்லுக்கட்டும் மம்தா பானர்ஜி - 3-வது நாளாக தர்ணா

சிபிஐ விசாரணை விவகாரத்தில் மத்திய பாஜக அரசை கண்டித்து மேற்கு வங்க முதல்வர் வரும் 8-ம்தேதி வரை தர்ணா செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார். இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேற்கு வங்க விவகாரத்தை சிபிஐ உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

ஹைலைட்ஸ்

  • சிபிஐ தாக்கல் செய்துள்ள மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
  • கொல்கத்தா காவல் ஆணையர் மீது சிபிஐ புகார் தெரிவித்துள்ளது
  • மாநில கட்சிகள் மம்தாவுக்கு ஆதரவாக உள்ளன
New Delhi:

சிபிஐ விசாரணை விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று 3-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் ஆதரவு அளித்திருப்பதால் இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை எற்படுத்தி வருகிறது. 

கொல்கத்தா போலீஸ் கமிஷ்னரை விசாரிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தி சிபிஐ நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. மம்தா தரப்பில் அவர் 8-ம்தேதி வரை தர்ணாவில் ஈடுபட்டிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் பிரச்னை இன்னும் பரவலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மம்தா தர்ணா போராட்டம் குறித்தான தகவல்கள்

1. மேற்கு வங்கத்தில சாரதா சிட்பண்ட்ஸ் நிதி நிறுவனத்தில் நடந்த மோசடி தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரியான ராஜீவ் குமார் விசாரணை நடத்தினார். அவர் தற்போது கொல்கத்தா மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி வருகிறார். 

2. நிதி நிறுவன மோசடி வழக்குகளை ராஜீவ் குமார் முறையாக விசாரிக்கவில்லை எனக் கூறப்பட்டதையடுத்து, வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக விசாரிப்பதற்காகப் பலமுறை சிபிஐ சம்மன் அனுப்பியும் ராஜீவ் குமார் ஆஜராகவில்லை.

3. ராஜீவ் குமாரை விசாரிக்க வேண்டும் என்று மேற்கு வங்க போலீஸாருக்கு சிபிஐ அதிகாரிகள் நேற்று தகவல் அளித்துவிட்டு, சிபிஐ அதிகாரிகளில் ஒரு பிரிவினர், ராஜீவ் குமார் இல்லத்துக்கு சென்றனர். அவர்களை அங்குப் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது, சிபிஐ அதிகாரிகளிடம் முறையான ஆவணங்கள் இருக்கிறதா போலீசார் கேட்க, இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

4. பின்னர், சிபிஐ அதிகாரிகளை வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றிக் கொண்டு, போலீஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் சிபிஐ அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

5. மேற்கு வங்காளம் மாநில போலீசாரின் நடவடிக்கை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தரப்பில் நேற்று வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு இன்று விசாரிக்கப்படவுள்ளது.

6. கொல்கத்தா எஸ்பிளனேடு பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் எதிரில் நேற்று இரவில் இருந்து முதல்வர் மம்தா பானர்ஜி, அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம்' என்ற பெயரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

7. மம்தாவுக்கு ஆதரவாக பல்வேறு மாநில கட்சி தலைவர்களும், முதலமைச்சர்களும் கருத்து வெளியிட்டு வருகின்றனர். மத்தியில் ஆளும் பாஜக மற்றும் அதன் ஆதரவு கட்சியினர் மம்தாவின் போக்குக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். 

8. மாநிலத்தின் பல பகுதிகளில் மத்திய அரசை கண்டித்தும் மம்தாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாகவும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

9. மம்தா தரப்பில் 9-ம்தேதி வரைக்கும் அவர் தர்ணாவில் ஈடுபடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

10. சிபிஐ விசாரணை விவகாரத்தில் மத்திய அரசு, சிபிஐ, மம்தா பானர்ஜி இந்த மூவரும் எந்தவிதத்திலும் பின் வாங்காமல் இருப்பதால் இந்த விவகாரம் இன்னும் பரவலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

.