நிலைமை சீரடைந்ததும் 12-ம் வகுப்புக்கு தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 1 முதல் 15-ம்தேதி வரை நடைபெறவிருந்த பள்ளி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. பள்ளி தேர்வுகளை ரத்து செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில், ஜூலையில் நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக சி.பி.எஸ்.இ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்திருக்கும் சூழலில், தேர்வுகளை ஒத்தி வைத்த சி.பி.எஸ்.இ., ஜூலை 1 முதல் 15ம்தேதி வரை பள்ளி தேர்வுகள் நடைபெறும் என அறிவித்திருந்தது.
இருப்பினும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராததால், தேர்வு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. இதற்கிடையே தமிழகம் உள்பட பல மாநில அரசுகள் பள்ளித் தேர்வுகளை ரத்து செய்து, மாணவர்களை ஆல் பாஸ் செய்து வருகிறது.
இந்த நிலையில், ஜூலை 1 முதல் 15-ம்தேதி வரை நடைபெறவிருந்த பள்ளித் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக சி.பி.எஸ்.இ. உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தேர்வை ஒத்தி வைக்கக்கோரி மாணவர்களின் பெற்றோர் தொடர்ந்த வழக்கில் சி.பி.எஸ்.இ. இந்த பதிலை அளித்துள்ளது. இதனால் மாணவர்களும், பெற்றோரும் நிம்மதி அடைந்துள்ளனர்.
மேலும் நிலைமை சீரடைந்த பின்னர் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வு நடைபெறும் என உச்ச நீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது.