தேர்வில் வெற்றி பெற்றிருக்கும் மாணவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
New Delhi: சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், அவர்களது ஆசிரியர், பெற்றோர் உள்ளிட்டோருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை கூறியுள்ளார். மாணவர்களை இளம் நண்பர்கள் என்று மோடி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
10-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் இன்று மதியம் 3 மணிக்கு வெளியானது. இதில் 13 பேர் 500-க்கு 499 மதிப்பெண்களை பெற்று முதலிடம் பிடித்தனர். 2-வது இடத்தை 24 மாணவர்களும், 3-வது இடத்தை 58 மாணவர்களும் கைப்பற்றினர். தேர்வில் வெற்றி பெற்றவர்களை பாராட்டி பிரதமர் மோடி ட்விட் செய்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது-
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற என் இளம் நண்பர்களை என்னி பெருமைகொள்கிறேன். அவர்களது எதிர்காலம் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இளம் நட்சத்திரங்கள் தொடர்ந்து எங்களை பெருமை கொள்ளச் செய்யட்டும். அவர்களின் ஆசிரியர்கள், பெற்றோருக்கும் எனது வாழ்த்துக்கள்.
இவ்வாறு மோடி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெற்ற 10-ம் வகுப்பு மாணவர்களின் சதவீதம் 92.45 ஆக உள்ளது.
95 சதவீதத்தை விட 57,256 மாணவர்கள் கூடுதல் மதிப்பெண்னையும், 90 சதவீதத்தை விட 2.25 லட்சம் மாணவர்கள் கூடுதல் மதிப்பெண்ணையும் பெற்றுள்ளனர்.
நாட்டிலேயே சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் 10- வகுப்பு பிரிவில் கேரளாவின் திருவனந்தபுரம்தான் அதிக தேர்ச்சி விழுக்காட்டை பெற்றுள்ளது. இங்கு 99.85 சதவித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக சென்னையில் 99 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
டெல்லியின் தேர்ச்சி சதவீதம் மோசமாக உள்ளது. இங்கு 80.95 சதவீத மாணவர்களே தேர்ச்சி அடைந்துள்ளனர்.