பொதுப்பிரிவு மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
New Delhi: டெல்லியில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின்கீழ் பயிலும் மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கும் நிலையில் மாணவர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டாம் என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது. இதனை மாநில அரசே செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் கடந்த வாரம் உயர்த்தப்பட்டது. இதன்படி 10,12-ம் வகுப்பு பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கட்டணம் ரூ. 750-லிருந்து ரூ. 1,500-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் ரூ. 375-ல் இருந்து ரூ. 1,200-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டணம் 5 பாடங்களுக்கு உரியதாகும்.
இந்த கட்டண உயர்வுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த டெல்லி முதல்வர் மணிஷ் சிசோடியா, 'சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் டெல்லி மாணவர்கள் தேர்வுக் கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. இதனை மாநில அரசே செலுத்தி விடும். இதேபோன்று கட்டண உயர்வை திரும்பப் பெறுமாறு சி.பி.எஸ்.இ. நிர்வாகத்திடம் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.' என்று தெரிவித்துள்ளார்.
10 மற்றும் 12-ம் வகுப்புக்கு தேர்வுக் கட்டணம் உயர்த்தப்பட்டதைப் போன்று 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பதிவுக்கான கட்டணத்தை சி.பி.எஸ்.இ. உயர்த்தியுள்ளது.