எந்த தேர்வையும் எதிர்கொள்ளாமல் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பாஸ் செய்யப்பட உள்ளனர்.
ஹைலைட்ஸ்
- ஊரடங்கு உத்தரவால் அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுகின்றன
- சி.பி.எஸ்.இ 1-8 வகுப்பு மாணவர்களை தேர்ச்சி பெறச்செய்ய பரிந்துரை
- மத்திய அரசின் அறிவிப்பால் மாணவர்கள், பெற்றோர் நிம்மதி
New Delhi: நாடுமுழுவதும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் கல்வி பயின்று வரும் 1 முதல் 8 –ம் வகுப்பு வரையிலான மாணவர்களை தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்று, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதேபோன்று 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களை அவர்களது ப்ராஜெக்ட், இடைத்தேர்வுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘கொரோனா வைரஸ் பரவி வருவதால், அதன் காரணமாக 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான சி.பி.எஸ்.இ. மாணவர்களை தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தகுதியின் அடிப்படையில் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களை தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவி வரும் நிலையில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள். தேர்வுக்கு செல்ல வெளியே செல்ல வேண்டும் என்பதால், மாணவர்களின் பெற்றோரும் பதற்றத்திற்கு ஆளாகி இருந்தனர்.
இந்த நிலையில் மத்திய அரசின் இன்றைய அறிவிப்பு பெற்றோர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. இதன்படி எந்த தேர்வையும் எதிர்கொள்ளாமல் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பாஸ் செய்யப்பட உள்ளனர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் தேர்வுகள் ரத்து அல்லது ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஐ.ஏ.எஸ். நேர்முகத் தேர்வும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சமூக விலகுதலை கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.
இந்தியாவில் கடந்த 25-ம்தேதி முதற்கொண்டு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கும்.