New Delhi: கேரள வெள்ளத்தால், அம்மாநிலத்தில் பயின்று வந்த மாணவர்கள் தங்களது பள்ளி சான்றிதழ்களை இழந்திருந்தால், அவர்களுக்கு டிஜிட்டல் முறையில் மீண்டும் சான்றிதழ் வழங்கப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
கேரளாவில் சிபிஎஸ்இ-க்கு கீழ் 1,300 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் பயின்று வரும் மாணர்களின் பள்ளி சார்ந்த சான்றிதழ்களை ‘பரிணாம் மஞ்சுஷா’ என்ற பெயரின் கீழ் சேமிக்கப்பட்டு வருகிறது. இதிலிருந்துதான் மாணவர்கள், தங்களின் சான்றிதழ்களை டிஜிட்டல் முறையில் மீண்டும் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிணாம் மஞ்சுஷா, மத்திய அரசின் ஆவணங்களை சேமித்து வைக்கும் ‘டிஜிலாக்கர்’ என்ற இணையதளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
2004 முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான சான்றிதழ்களை பெற டிஜிலாக்கர் இணையதளத்துக்குச் சென்று தங்களின் கணக்குடன் ஆதார் எண்ணை மாணவர்கள் சேர்க்க வேண்டும். அதன் பின்னர் பெயர், பதிவு எண், மற்றும் எந்த ஆண்டுக்கான சான்றிதழ் வேண்டுமோ அதை பதிவு செய்து சான்றிதழ்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இது குறித்து சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திருப்பதி, ‘சிபிஎஸ்இ அமைப்பு, பரிணாம் மஞ்சுஷா-வின் லாக்-இன் ஐடி மற்றும் கடவுச் சொல்லை மாணவர்கள் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணுக்கு அனுப்பும். அதன் மூலம் அவர்கள் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். சம்பந்தப்பட்ட மாணவர்களின் கணக்குகளுக்குள் வேறொரு மாணவரின் சான்றிதழ் இருந்தால், உடனடியாக திருவணந்தபுரத்தில் இருக்கும் சிபிஎஸ்இ கிளை அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார்.