கர்நாடகாவில் உள்ள தந்தையின் எஸ்டேட்டில் வைத்து சித்தார்த்தாவிற்கு இறுதி சடங்குகள் நடைபெறுகிறது.
Mangaluru, Karanataka: 'கஃபே காஃபி டே' உரிமையாளர் சித்தார்த்தாவின் உடல் கர்நாடகாவின் சிக்மங்களூரில் உள்ள அவரது தந்தையின் எஸ்டேட்டில் தகனம் செய்யப்பட உள்ளது என்று சிருங்கேரி எம்எல்ஏ ராஜகவுடா தெரிவித்துள்ளார்.
அவரது தந்தை எஸ்டேட்டிலே அவரது உடல் தகனம் செய்யப்பட வேண்டும் என அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து முடிவு செய்துள்ளனர் என்று ராஜகவுடா தெரிவித்தார்.
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும்,'கஃபே காபி டே' நிறுவனத்தின் உரிமையாளருமான வி.ஜி.சித்தார்த்தா திங்களன்று இரவு முதல் மாயமான நிலையில், தொடர்ந்து, 36 மணி நேரம் நடந்த தீவிர தேடுதலுக்கு பின்னர் இன்று காலை 6.30 மணி அளவில் மீனவர்களால் அவரது உடல் நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் சித்தார்த்தா 'லாபகரமான தொழிலை உருவாக்குவதில் தோல்வியடைந்துவிட்டேன்' என தன் காஃபி டே ஊழியர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், “37 வருடங்களுக்குப் பிறகு 30,000 நேரடி வேலை வாய்ப்புகளை உருவாக்கி, சிறந்த முறையில் இருந்தபோதிலும் சரியான லாபகரமான வணிகத்தை உருவாக்கத் தவறிவிட்டேன்.
நான், என்னுடைய அனைத்தையும் கொடுத்துவிடுகிறேன். என் மீது நம்பிக்கை வைத்திருந்த அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சில நாள்களுக்கு முன்பு, என் நண்பரிடமிருந்து அதிக அளவிலான பணம் கடனாகப் பெற்றுள்ளேன். நான் கடன் வாங்கிய அனைவரும் தற்போது எனக்கு அழுத்தம் தரத் தொடங்கிவிட்டனர். நான் நீண்ட காலமாக போராடினேன், ஆனால் இன்று என்னால் எந்த அழுத்தத்தையும் எடுத்துச்செல்ல முடியாததால் கைவிடுகிறேன் என்று அவர் அந்த கடிதத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2017 செப்டம்பர் மாதம் சித்தார்த்தாவின் அலுவலகம் வருமான வரித்துறையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அவரது குடும்பம் கடந்த 130 ஆண்டுகளுக்கு மேலாக காஃபி உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வருகிறது. நாட்டின் மிகப்பெரிய காஃபி பீன் ஏற்றுமதியாளர்களில் இவரும் ஒருவர் ஆவார்.