சிக்கமங்களூரு மாவட்டத்தில் இருக்கும் அவரது சொந்த கிராமத்தில் சித்தார்த்தாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது
Bengaluru: கஃபே காஃபி டே நிறுவனத்தின் உரிமையாளரான வி.ஜி.சித்தார்த்தாவின் இறுதிச் சடங்கு நேற்று மாலை நடைபெற்றது. இறுதிச் சடங்கில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா, கர்நாடக காங்கிரஸின் மூத்த நிர்வாகி டி.கே.சிவக்குமார், பல்வேறு அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் தகவல்படி, கர்நாடகாவின் மங்களூரு அருகேயுள்ள ஆற்றுக்கு அருகே கடந்த திங்கட் கிழமை காணாமல் போனார் சித்தார்தா. 36 மணி நேரம் கழித்து அவரது உடல் நேத்ராவதி ஆற்றுக் கரையில் 2 மீனவர்களால் கண்டெடுக்கப்பட்டது. தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் மற்றும் அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சித்தார்த்தா, கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் மிகப் பெரிய காஃபி செயின் கடைகளின் நிறுவனரான சித்தார்த்தா, கடந்த திங்கட் கிழமை மங்களூருவில் இருக்கும் நேத்ராவதி ஆற்றுக்கு அருகே காணப்பட்டார். அப்போது அவர் தன்னுடைய ஓட்டுநரான பாசவராஜ் பாட்டில் உடன் இருந்தார். பாட்டில், காவல்துறையிடம் சித்தார்த்தா குறித்து கொடுத்த தகவல்படி, “பெங்களூருவிலிருந்து சாக்லேஷ்பூருவுக்கு செல்ல இருந்தோம். ஆனால், திடீரென்று அவர் மங்களூருவுக்குப் போகலாம் என்றார். மங்களூருவில் இருக்கும் பாலத்தைக் கடக்கும்போது வாகனத்தை நிறுத்தச் சொன்னார். பாலத்தின் மறுபக்கம் சென்று என்னைக் காத்திருக்கச் சொன்னார். ஆனால், அவர் வரவே இல்லை” என்று கூறியுள்ளார்.
60 வயதாகும் சித்தார்த்தா, காணாமல் போனதற்கு சில நாட்களுக்கு முன்னர், தனது கஃபே காஃபி டே போர்டு உறுப்பினர்களுக்கு ஓர் கடிதத்தை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் வருமான வரித் துறை மன ரீதியாக துன்புறுத்தியது குறித்தும், நிறுவனத்தின் தனியார் பார்ட்னர்களில் ஒருவர் கொடுத்த அதீத அழுத்தம் குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.
சித்தார்த்தாவின் அலுவலகம் கடந்த 2017 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் வருமான வரித் துறையால் சோதனை செய்யப்பட்டது. இந்தியாவிலிருந்து காஃபி கொட்டை ஏற்றுமதி செய்வதில், சித்தார்த்தாவின் நிறுவனமும் முன்னணியில் இருக்கிறது. அவரது குடும்பம் கடந்த 130 ஆண்டுகளாக காஃபி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில் அவரின் இறப்பு தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தின. நேற்று காலை அவரது உடல் கிடைத்த பின்னர், பிரேதசப் பரிசோதனை செய்யப்பட்டு, அவரது குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சிக்கமங்களூரு மாவட்டத்தில் இருக்கும் அவரது சொந்த கிராமத்தில் சித்தார்த்தாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதிச் சடங்கில் பலர் கலந்து கொள்ள, சித்தார்த்தாவின் மகன் அமர்த்தியா, அவருக்கு இறுதிச் சடங்குகளை செய்தார். அப்போது பல முறை அனைவரது முன்னிலையில் அவர் கதறி கதறி அழுதுள்ளார்.