72 வருடத்தில் முதல் முறையாக இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் பெற்ற வரலாற்று வெற்றிக்கு ட்விட்டரில் குவிந்த வாழ்த்துகளின் தொகுப்பு:
மோடி - இந்திய பிரதமர்:
ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட்டில் வரலாற்று வெற்றி பெற்றுள்ளோம். கடுமையாக உழைத்து, மகிழ்ச்சியான வெற்றியைப் பெற்ற இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள். இந்தத் தொடர் மறக்க முடியாது ஆட்டம் மற்றும் அணி ஒற்றுமையின் வெளிப்பாடு. இனி வரும் போட்டிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்!
விராட் கோலி - இந்திய கேப்டன்:
இந்த வெற்றிகரமான அணியில் ஒருவனாக இருப்பது பெருமிதம் கொள்ள வைக்கிறது. இப்போதும், எப்போதும் இது வெறும் அணி அல்ல, குடும்பம்.
புஜாரா - ஆட்ட தொடர் நாயகன்:
ஆஸ்திரேலியாவில் இந்த வரலாற்று வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது. ஒவ்வொரு நொடியும் இந்த அணி வெற்றியை மட்டுமே நினைத்து செயல்பட்டது. உங்களின் அன்புக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி. இது மீதமுள்ள என் வாழ்நாளில் மறக்கமுடியாத மகிழ்ச்சியான நாள்.
கவுதம் கம்பீர் - இந்திய முன்னாள் வீரர்:
வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு வாழ்த்துக்கள். இந்திய விளையாட்டின் பெருமைக்குரிய நாள் இது. வார்னர் ஸ்மித் இல்லை என்ற வாதமெல்லாம் தேவையில்லை. இது கொண்டாட்டத்துக்கான தருணம்.
சச்சின் டெண்டுல்கர் - இந்திய முன்னாள் வீரர்:
இந்திய கிரிக்கெட்டின் கொண்டாட்டமான நாள். போட்டியிடும் திறன் மற்றும் தீர்க்கமான செயல்பாடு அணிக்கு வெற்றியை தந்துள்ளது. உங்களை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். பாய்ஸ்!
ஜஸ்ப்ரித் பும்ராஹ் - இந்திய வேகப்பந்துவீச்சாளர்:
வரலாறு உருவாகியுள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் முதல் வெற்றி. வெற்றியின் அங்கமாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது நீண்ட நாட்களுக்கு மனதில் நிற்கும்.
சவுரவ் கங்குலி - இந்திய முன்னாள் கேப்டன்:
''அபாரமான வெற்றி... ஒவ்வொரு தருணத்தையும் கொண்டாடுபவர்கள் இப்படித்தான் ஆடுவார்கள். அணியின் ஒவ்வொருவருக்கும் எனது வாழ்த்துகள்'' என்று பும்ராஹ்வின் ட்விட்டை ரீ-ட்விட் செய்திருந்தார்.
சுரேஷ் ரெய்னா - இந்திய வீரர்
ஆஸ்திரேலியாவில் இந்தியா தொடரை முதல்முறையாக வெல்வது வரலாற்று சிறப்புமிக்கது. இந்திய அணியின் அருமையான முயற்சி. மழை ஆட்டத்தை தடுத்தாலும் கொண்டாட்டங்களை தடுக்கவில்லை.