நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிராக அதிமுக எம்.பிக்களும், திமுக எம்.பிக்களும் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் காங்கிரஸ் எம்.பிக்கள் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக நாடளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்றைய நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியது. மக்களவை கூடிய சிறிது நேரத்தில் அதிமுக எம்பிக்கள் எழுந்து கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பினர். மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டபடியே அவையின் மையப்பகுதிக்கு சென்றனர். கைகளில் கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
இதையடுத்து அவையை மதியம் வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். இதேபோல், மாநிலங்களவையில் அதிமுக மற்றும் திமுக எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானம் செய்த அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, அவை உறுப்பினர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்தார்.
ஆனாலும், எம்பிக்களின் அமளி நீடித்தது. இதையடுத்து இரு அவைகளும் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும், மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவையில் இருந்து அதிமுக, திமுக எம்.பிக்களும், மாநிலங்களவையில் இருந்து அதிமுக எம்.பிக்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மக்களவையில் இருந்து அதிமுக எம்.பிக்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டுள்ளார். தொடர் அமளியில் ஈடுபட்டு அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவித்ததாக 5 அமர்வுகளில் பங்கேற்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மக்களவையின் 374A நாடாளுமன்ற விதிமுறைப்படி சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் கர்நாடக மாநிலத்தில் சில தொகுதிகளையாவது பிடிக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. அதனால்தான் மேகதாது அணை திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. தமிழகத்தின் உரிமைக்காக ஜனநாயக முறையிலான எங்கள் போராட்டத்துக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.