This Article is From Mar 23, 2020

கொரோனா முன்னெச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்கள் முடக்கம்!

Coronavirus: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 370 பேர் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா முன்னெச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்கள் முடக்கம்!

கொரோனா முன்னெச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்கள் முடக்கம்

ஹைலைட்ஸ்

  • நாடு முழுவதும் 75 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு
  • இதுவரை 370 பேருக்கு கொரோனா பாதிப்பு
  • தமிழகத்தில் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்கள் உள்பட நாடு முழுவதும் 75 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவை மார்ச் 31 ஆம் தேதி வரை கடைப்பிடிக்குமாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 370 பேர் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ரயில்கள், மெட்ரோ மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் உள்ளிட்டவை நிறுத்தப்பட்டுள்ளன. 

பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள், மார்க்கெட்டுகள், மால்கள், திரையரங்குகள், உடற்பயிற்சி மையங்கள் உள்ளிட்டவை ஏற்கனவே மூடப்பட்டுள்ளன. இதனிடையே, பிரதமர் மோடியின் வேண்டுகோளின்படி நேற்று இந்தியா முழுவதும் சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகத் தமிழகத்தில் இன்று காலை 5 மணி வரை சுய ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டது.

தொடர்ந்து, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாட்டில் கொரோனா பாதித்த பெங்களூரு, ஹைதராபாத், திருவனந்தபுரம் உள்ளிட்ட 75 மாவட்டங்களைத் தனிமைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதிகபட்சமாகக் கேரளா மற்றும் மகாராஷ்ட்டிராவில் 10 மாவட்டங்களைத் தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களைத் தனிமைப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த மூன்று மாவட்டங்களிலும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர அனைத்தையும் முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவை மார்ச்.31 ஆம் தேதி வரை கடைப்பிடிக்கும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏற்கெனவே 7 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கலிபோர்னியாவிலிருந்து வந்த நபருக்கும், துபாயிலிருந்து வந்த நபருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டிருப்பதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் கலிபோர்னியாவிலிருந்து வந்த நபர் சென்னை ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையிலும், துபாயிலிருந்து வந்த நபர் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டிலும் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் தனது ட்விட்டில் தெரிவித்திருக்கிறார்.

.