தமிழக முதல்வர் சர்வாதிகாரம் என்னும் ஜனநாயகவிரோத நோய்த்தொற்றுக்கு ஆளாகிவிடக்கூடாது என்று திருமாவளவன் கூறியுளள்ளார்
கொரோனா வைரஸ் தொற்று, சமூக பரவல் நிலையை எட்டினால் அதற்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று மே, ஜூன் மாதங்களில்தான் உச்சத்தை எட்டும் என்று மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நேரத்தில், மே 3 ஆம் தேதி வரை முழு அடைப்பை அறிவித்த மத்திய அரசு, ஏப்ரல்-20 முதல் அதில் சில தளர்வுகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியிருக்கிறது. அரசு அலுவலகங்கள் இயங்கவும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
அதுபோலவே, தமிழக அரசும் இங்குள்ள பல்வேறு தொழிற்சாலைகள் இயங்குவதற்கு ஏற்பாடு செய்து வருவதாகத் தெரிகிறது. இதன் மூலம், மக்கள் கும்பல் கும்பலாகப் பயணிப்பதற்கும் ஓரிடத்தில் திரளாகக் கூடுவதற்கும் நெருக்கமாக இருந்து பணியாற்றுவதற்குமான கட்டாயம் ஏற்படும். அதன்வழி நோய்த்தொற்று அதிகரிக்கவும் வாய்ப்பு உருவாகும்.
அத்தகைய ஒரு கேடான சூழல் உருவாகுமேயானால், அதற்கு முழுஅடைப்பில் திடீரென தளர்வுகளை ஏற்படுத்த முயற்சிக்கும் மத்திய-மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.
சமூகப் பரவல் என்னும் 3-ஆவது கட்டத்துக்கு போய்விடாமல் தடுப்பதற்கு அல்லது தாமதிப்பதற்கே முழு அடைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு இப்போதுதான் துவக்கியுள்ளது. 'ரேபிட் டெஸ்டிங் கிட்' என்னும் துரித சோதனைக் கருவிகளின் முதல் தவணை மத்திய அரசால் பகிர்ந்தளிக்கப்பட்டு, இன்று தான் உரிய மாநிலங்களுக்கு அவை போய் சேர்ந்துள்ளன. தமிழகத்தைப்பொருத்தவரையில், போதிய எண்ணிக்கையில் படுக்கைகளோ, வெண்டிலேட்டர்களோ கைவசமில்லை. மருத்துவர்களுக்கான பாதுகாப்பு இப்போதும் கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்நிலையில், ஏதோவொரு அழுத்தத்துக்காளாகி மே3 வரையிலான முழுஅடைப்பில் இருவாரங்களுக்கு முன்னதாகவே தளர்வுகளை ஏற்படுத்தி, வழக்கமான இயல்புநிலையை ஏற்படுத்த முயற்சிப்பது தீவிரமான சமூகப் பரவலுக்குக் காரணமாகிவிடும்; அது பேராபத்தாக முடியும் என விடுதலைச்சிறுத்தைகள் எச்சரிக்கையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
கொரோனா பரவலைச் சமாளிக்கப் போதுமான முன் தயாரிப்பு இல்லாமல் மேற்கொள்ளப்படும் மத்திய மாநில அரசுகளின் இந்தத் தளர்வு நடவடிக்கைகள், குறிப்பிட்ட சில கார்ப்பரேட் முதலாளிகளின் அழுத்தம் காரணமாகவும், மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவுமே மேற்கொள்ளப்படுகின்றனவோ என்கிற ஐயம் எழுகிறது.
மத்திய மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளில் உள்ள போதாமைகள் மற்றும் குறைகளைச் சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சிகள் ஆற்றவேண்டிய கடமை. அதைச் செய்தால் ‘எதிர்க்கட்சித் தலைவர்களிடம் ஆலோசனை கேட்க அவர்களென்ன மருத்துவர்களா?'என்று முதல்வர் கேலி பேசுவது அதிர்ச்சியளிக்கிறது. இது முதல்வரின் பொறுப்புக்கேற்ற நாகரிகமல்ல என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
அப்படியென்றால், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி அவர்கள் எதிர்க்கட்சிகளின் தலைவர்களோடு தொலைத்தொடர்பில் கலந்தாய்வு செய்தாரே, அஃதென்ன அவருடைய அறியாமையின் வெளிப்பாடா? என்ற கேள்வி எழுகிறது. மருத்துவம் படித்தவர்களே எதிர்க்கட்சித் தலைவர்களாக இருக்க வேண்டுமென்றால், முதல்வர் பதவிக்கும்கூட அது பொருந்தும்தானே என்கிற 'லாஜிக்', இங்கே கேள்வியாக எழுகிறது.
அரசியல் தலைவர்கள் கட்டாயம் அறிந்திருக்கவேண்டியது ஜனநாயகம் என்ற மருத்துவத்தைத்தான். அதுதான் சர்வாதிகாரம் என்ற நோய்த் தொற்றிலிருந்து நாட்டைக் காப்பாற்றும். கொரோனா தொற்று தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்களைத்தான் அழிக்கும். ஆனால், சர்வாதிகாரம் என்னும் நோய்த்தொற்றோ ஒட்டுமொத்த நாட்டையும், அடுத்தடுத்த தலைமுறையையும் அழித்துவிடும்.
எனவே, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் சர்வாதிகாரம் என்னும் ஜனநாயகவிரோத நோய்த்தொற்றுக்கு ஆளாகிவிடக்கூடாது என்பதே எமது கவலை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டுகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.