எஸ்.வி.சேகர் மீது 2 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு!
தேசிய கொடியை அவமதித்து வீடியோ வெளியிட்ட பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர் மீது சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் அண்மையில் பெரியார் மற்றும் அண்ணா சிலை மீது மர்ம நபர்கள் அடுத்தடுத்து காவி சாயம் ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பெரும்பாலான அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். தமிழக முதல்வர் எடப்பாடியும் காவி சாயம் பூசி தலைவர்கள் சிலைக்கு களங்கம் ஏற்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, முதல்வரின் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில், பாஜகவை சேர்ந்த எஸ்.வி.சேகர் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், காவி ஆடையை அணிந்தால் முதல்வர் களங்கம் என்கிறார். அப்படியென்றால், தேசிய கொடி நமக்கு களங்கமா? வரும் ஆக.15ம் தேதி தேசிய கொடியில் காவியை அகற்றி விட்டு கொடியை ஏற்றப்போகிறாரா? தேசிய கொடியில் உள்ள 3 நிறங்களும் 3 மதங்களை குறிக்கும் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, தமிழக முதலமைச்சரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், தேசியக் கொடியை அவமதித்தும் பேசி வீடியோ வெளியிட்ட எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் அதிமுக கொடி குறித்தும் அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எஸ்.வி.சேகர் எதையாவது கூறுவார், வழக்கு வந்தால் ஓடி ஒளிந்துவிடுவார் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று எஸ்.வி சேகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய கொடியை மத அடையாளங்களுடன் ஒப்பிட்டு பேசியதாக, அவர்மீது 2 பிரிவுகளின் கீழ் மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.