This Article is From Feb 01, 2019

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் உள்நோக்கம் நிறைந்ததாக உள்ளது: மு.க.ஸ்டாலின் கடும் சாடல்!

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் உள்நோக்கம் நிறைந்த அறிவிப்புகளாகவே உள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் உள்நோக்கம் நிறைந்ததாக உள்ளது: மு.க.ஸ்டாலின் கடும் சாடல்!

பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில், 2019-20 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வரும் மே மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தச் சூழலில், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி இல்லாத நிலையில், இடைக்கால நிதி அமைச்சரான பியூஸ் கோயல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இதில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் ரூ.5 லட்சத்திற்கு கீழ் ஆண்டு வருவாய் உள்ளோருக்கு வருமான வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கபட்டுள்ளது. 5 ஏக்கருக்கு கீழ் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படும் போன்ற பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, மக்களை ஆசை வார்த்தை கூறி திசைதிருப்பும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது. இதில் உள்நோக்கம் நிறைந்த அறிவிப்புகளாகவே உள்ளது. விவசாயிகளை கவர்ந்திழுத்து கரையேறி விடலாம் என்று கனவுலகில் பாஜக உள்ளது. அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை போல் இருந்தாலும் உள்நோக்கம் கொண்டவையாகவே உள்ளது.

பட்ஜெட் திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நேரம் விவசாயிகளை கவரும் நோக்கமாக கொண்டுள்ளது. பேரணி நடத்திய விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய மத்திய அரசு மறுத்துவிட்டது. ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி இல்லை என பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் பாஜக ஆட்சியில் முதல் ஆண்டில் வருமான வரிச்சலுகையை அறிவித்து இருக்க வேண்டும். வருமான வரிச்சலுகை அறிவிப்பை வெளியிட பாஜக அரசுக்கு 4 ஆண்டுகள் ஆகி இருக்கிறது என்று அவர் கடுமையாக சாடியுள்ளார்.


 

.