புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு தன்னிச்சையாக எல்லாம் வெளியிடாது - திமுக எம்.பி
புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு தன்னிச்சையாக எல்லாம் வெளியிடாது என பாமக நிறுவனர் ராமதாஸூக்கு திமுக எம்.பி செந்தில் குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
மத்திய அரசே தன்னிச்சையாக புதிய கல்விக் கல்விக் கொள்கையை வெளியிடுவது முறையல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருந்தார். இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ''நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் பொருளாதாரம் சார்ந்த புதிய அறிவிப்புகளுடன் கல்வி சார்ந்த அறிவிப்பு ஒன்றும் இடம் பெற்றுள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்பதுதான் அதுவாகும். மத்திய அரசு கடந்த ஆண்டு வெளியிட்ட வரைவு கல்விக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு தேவையற்றது ஆகும்.
குறிப்பாக மும்மொழிக் கொள்கை, குறைந்த எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்ட பள்ளிகளை மூடுவது, உயர்கல்விக்கான மானியத்தைக் குறைப்பது, வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை அனுமதிப்பதன் மூலம் கல்வியில் சமூக நீதிக்கு பாதிப்பை ஏற்படுத்துவது என வரைவுக் கல்விக் கொள்கையில் எதிர்மறையான அம்சங்கள் ஏராளமாக உள்ளன. சுருக்கமாகக் கூறினால், அண்மைக் காலங்களில் மக்களிடம் கடும் எதிர்ப்பைச் சந்தித்த கொள்கைகளில் வரைவுக் கல்விக் கொள்கை குறிப்பிடத்தக்கதாகும்.
வரைவுக் கல்விக் கொள்கை தொடர்பாக கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பிலிருந்து அளிக்கப்பட்டுள்ள யோசனைகளில் எவ்வளவை மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது? மாணவர்கள் நலனுக்கு எதிரான திட்டங்களில் எத்தனை நீக்கப்பட்டுள்ளன? என்பன போன்றவற்றை முழுமையாக அனைவருக்கும் தெரிவித்த பிறகு தான் புதிய கல்விக் கொள்கை வெளியிடப்பட வேண்டும். அதற்கு முன்பாக மத்திய அரசே தன்னிச்சையாக புதிய கல்விக் கல்விக் கொள்கையை வெளியிடுவது முறையல்ல.
எனவே, வரைவு தேசிய கல்விக் கொள்கை மீது எவ்வளவு கருத்துரைகளும், ஆலோசனைகளும் பெறப்பட்டன; அவற்றில் எத்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டன என்பது குறித்த வெள்ளை அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும். அதனடிப்படையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க வேண்டும். அதில் கருத்தொற்றுமை ஏற்பட்டால் மட்டுமே புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ராமதாஸ் கருத்திற்கு திமுக எம்.பி செந்தில் குமார் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பான தனது ட்வீட்டர் பதிவில் செந்தில் குமார் கூறியதாவது, புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு தன்னிச்சையாக எல்லாம் வெளியிடாது. எப்படி உங்க ஆதரவு உடன் குடியுரமை திருத்த மசோதா இஸ்லாமிய, இலங்கை தமிழர்களுக்கு எதிராக ராஜ்யசபாவில் வாக்களித்திர்களோ, அதே போல புதிய கல்விக் கொள்கையை உங்கள் பொன்னான ஆதரவுடன் நிறைவேற்றுவீர்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.