சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தைப் புரட்டிப் போட்ட ‘கஜா' புயலினால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்ய தமிழகம் வருகிறது மத்திய குழு. அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் புயலால் பாதித்த பல்வேறு இடங்களுக்குச் சென்று பாதிப்புகளை பார்வையிட உள்ளது மத்திய குழு.
நேற்று கஜா சேதங்கள் குறித்து விளக்கி நிவாரணம் பெறும் நோக்கில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி சென்று சந்தித்தார். பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு முதல்வர், ‘கஜா புயல் காரணமாக இதுவரை 12 மாவட்டங்களில் 63 பேர் உயிரிழந்துள்ளனர். கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும். கஜா புயலால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.
கஜா புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய விரைவில் மத்திய குழுவை தமிழகத்திற்கு அனுப்பி வைக்குமாறு பிரதமரிடத்தில் கோரினேன். அதற்கு உடனடியாக அது குறித்து நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மோடி கூறினார். மேலும், கஜா புயல் நிவாரண நிதியாக 15 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்துக்கு வழங்க பிரதமரிடம் கோரினேன். புயல் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள உடனடியாக 1,500 கோடி ரூபாய் பிரதமரிடத்தில் கோரப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.
இந்நிலையில் புயல் சேதங்களை குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு இன்று தமிழகம் வர உள்ளது. அந்த குழு அடுத்த 3 நாட்களுக்கு புயல் சேதங்கள் குறித்து ஆய்வு செய்யும். அதன் பின்னர் மத்திய அரசுக்கு, அந்தக் குழு அறிக்கை சமர்பிக்கும். அதைத் தொடர்ந்து தான் மத்திய அரசின் நிவாரண நிதி தமிழகத்துக்கு வழங்கப்படும்.