தேசிய அளவில் கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,000ஐ கடந்திருக்கக்கூடிய நிலையில், தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட முழு முடக்க நடவடிக்கையை மே 3 வரை நீட்டிப்பதாக சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். இந்த நிலையில் ஏற்கெனவே நாட்டின் பொருளாதாரம் வலுவிழந்து இருந்த நிலையில், கொரோனா தொற்றால் முன்னெடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக தற்போது நாட்டின் பொருளாதாரம் முற்றிலுமாக முடங்கியுள்ளது. உலக வங்கி இந்தியாவின் நடப்பு ஆண்டின் வளர்ச்சி என்பது 1.5-2.8 என்ற அளவில்தான் இருக்கும் என கணித்திருக்கின்றது. இந்த சூழலில் மத்திய அரசு இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவித்திருந்த 4 சதவிகித அகவிலைப்படி உயர்வினை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பின் மூலம், 2021-2022 காலகட்டங்களில் மாநில அரசு சார்பில் 82,566 கோடி ரூபாயும், மத்திய அரசின் சார்பில் 37,530 கோடி ரூபாயும் நடப்பு நிதியாண்டுகளில் சேமிக்கப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பிற்கு இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சம்மேளனத்தின் தமிழக பொது செயலாளர் இது குறித்த கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்…
கொரோனா கிருமி பரவுவதை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள முழு அடைப்பு காரணமாக விளிம்புநிலை மக்கள் கடும் துயருக்கு ஆளாகியுள்ளனர். கோடிக்கணக்கான தினக்கூலிகள் வருமானம் இன்றி தவிக்கின்றனர். பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சம்பள வெட்டு, பகுதி வேலை இழப்பு, வேலை இழப்பு ஆகிய கொடுமைகளைச் சந்தித்து வருகின்றனர். இவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். சிறு குறு நடுத்தர தொழில்கள் கடுமையான சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. அவற்றை மீட்டெடுக்கவும் கோடிக்கணக்கான தொழிலாளர்களுடைய வேலையை பாதுகாக்கவும் மத்திய அரசாங்கம் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
இந்த நிலையை எதிர்கொள்ள நாட்டின் செல்வா தாரங்களைச் சுரண்டி கொடுத்துள்ள கார்ப்பரேட்டுகளிடம் இருந்து கூடுதல் வரி வசூலிக்க வேண்டும். அதை விடுத்து தொழிலாளர்களின் சம்பளத்தில் கைவைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மத்திய அரசாங்க ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் 18 மாதகாலத்திற்கு பஞ்சப்படி வெட்டு என்ற மத்திய அரசின் அறிவிப்பு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது. ஏற்கனவே கடுமையான பொருளாதார சூழலை எதிர்கொண்டு அரசு பணியாற்றிவரும் ஊழியர்களுக்கு அவர்களுக்குரிய பஞ்சபடியை மறுக்கும் மத்திய அரசின் அறிவிப்பை வன்மையாக கண்டிக்கிறோம். அதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.மத்திய அரசாங்கம் தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்ய வில்லை என்றால் ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்கமும் வெகுண்டெழுந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறோம்.
என சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளது.
இது குறித்து சம்மேளனத்தின் அகில இந்திய இணை செயலாளர் சி.பி கிருஷ்ணனிடம் பேசிய போது, “தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று பரவல் பாதிப்புகளை சரி செய்வதற்கும் ஈடு செய்வதற்கும் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில் கைவைப்பது என்பதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. விலைவாசி ஏறுவதால்தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகிறது. விலைவாசியினை கட்டுப்படுத்திவிட்டால் அவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
நாட்டில் கார்ப்பரேட்டுகளுக்கான வரியினை மத்திய அரசு பட்ஜெட்டுக்கு முன்பு 30 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக குறைத்துள்ளது. தற்போது நிதி தேவை அதிகரித்திருக்கக்கூடிய நிலையில் கார்ப்பரேட்டுகளுக்கான வரியினை மீண்டும் 30 சதவிகிதமாக உயர்த்தலாம்.
நாட்டில் உள்ள 43 சதவிகித செல்வத்தினை தன்னகத்தே கொண்டுள்ள 10 சதவிகித பெரும் பணக்காரர்களுக்கு, சொத்து வரி மற்றும் வாரிசு வரியினை அரசு போட வேண்டும் அதன் மூலமாக திரட்டப்படக்கூடிய நிதியினைக் கொண்டு தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியினை சமாளித்து விட முடியும்.
இவ்வாறு பெறப்படக்கூடிய நிதியில் இதுவரை வருமான வரியே கட்டாத குடும்பங்களுக்கு, அதாவது வருடத்திற்கு 5 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் உள்ள குடும்பங்களுக்கு தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு ரூபாய் 7,500 வழங்க வேண்டும்.
மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வினை நிறுத்தும் செயலானது, மக்களின் வாங்கும் திறனை பெரிய அளவில் பாதிக்கும். இதனால் உற்பத்தி குறையும். இதன் விளைவுகள் நிச்சயம் நேர்மறையான தாக்கத்தினை உருவாக்காது. எனவே மத்திய அரசு இந்த முடிவினை கைவிடவேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாகும்.“
என சி.பி கிருஷ்ணன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
-கார்த்தி