This Article is From Mar 07, 2020

''கொரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு CAA-யை திரும்பப்பெற வேண்டும்'' : மருத்துவர்கள் சங்கம்

கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 31-ஆக உயர்ந்துள்ளது. பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ள நிலையில், குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களும் தொடர்கின்றன.

Advertisement
தமிழ்நாடு Written by

கொரோனா வைரஸை எதிர்கொள்வதை விட குடியுரிமை வழங்குவது அவசர பிரச்னையல்ல என்கிறது மருத்துவர்கள் சங்கம்.

Highlights

  • 'கொரோனாவை விட CAA முக்கிய பிரச்னை அல்ல'
  • 'மக்களின் உடல்நலன், உயிர், பொருளாதாரத்தை காப்பதுதான் முக்கிய பிரச்னை'
  • 'மக்களிடம் அரசு நம்பிக்கை, பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும்'

கொரோனா வைரஸ் பரவி வருவதைக் கவனத்தில் கொண்டு, குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அதன் பொதுச்செயலாளர் ரவிந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், உலகின் பல நாடுகளிலும் கொரோனா வைரஸ் (கோவிட் 19) பரவி வருகிறது. இது மக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவிட் -19 நோயைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் உலக நாடுகள் முனைப்புடன் ஈடுபட்டுள்ளன.

மக்கள் நெருக்கமாகக் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும் எனச் சர்வதேச பொதுச் சுகாதாரத்துறை நிபுணர்களும், உலக நல நிறுவன நிபுணர்களும் அறிவுறுத்தியுள்ளனர். இதைக் கவனத்தில் கொண்டு, நாடு முழுவதும் பொதுமக்களை, பெரும் எண்ணிக்கையில், அச்ச உணர்வுடன் ஒன்று திரண்டு போராட வைத்துள்ள, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். கொரோனா வைரஸ் தடுப்பைவிட, பிற நாடுகளிலிருந்து குடியேறியவர்களுக்குக் குடியுரிமை வழங்கும் பிரச்சினை, அவசரமான அதிமுக்கியப் பிரச்சினையல்ல.

Advertisement

நமது மக்களின் உடல் நலனையும், உயிரையும், பொருளாதாரத்தையும் காப்பதுதான் மிக முக்கிய தலையாயப் பிரச்சினை. கொரோனா வைரஸ் தடுப்பிற்கு, நாட்டில் அமைதியான சூழலையும், பாதுகாப்பு உணர்வையும், நம்பிக்கையையும் அனைத்துப் பகுதி மக்களிடமும் ஏற்படுத்த வேண்டும்.

அனைத்துக் குடிமக்களையும் கொரோனா வைரஸ் தடுப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். அந்தப் பொறுப்பும் கடமையும் மத்திய அரசுக்கு உள்ளது. எனவே, அதை உணர்ந்து, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

Advertisement

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 31-ஆக உயர்ந்துள்ளது. பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ள நிலையில், குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களும் தொடர்கின்றன.

கொரோனா பாதிப்பைக் கவனத்தில் கொண்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் ஹோலி பண்டிகை, ஆசிய பாதுகாப்பு மாநாடு, பிரதமரின் ஐரோப்பியப் பயணம் உள்ளிட்ட அரசு நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement