கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள், இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், மத்திய அரசால் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழு, புயல் பாதித்த இடங்களை இன்று மூன்றாவது நாளாக பார்வையிட்டு வருகிறது. இந்நிலையில் ஆய்வு குறித்து செய்தியாளர்கள் மத்தியில் பேசியுள்ளார் அக்குழுவின் தலைவர் டேனியல் ரிச்சர்ட்.
ரிச்சர்ட் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘நாங்கள் போகும் இடமெல்லாம் மின்சார கம்பங்கள் சாய்ந்து கிடக்கின்றன. அரசு இயந்திரம் மீட்பு நடவடிக்கைகளில் நன்றாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு குடிநீர் முதல் அனைத்து அடிப்படைத் தேவைகளும் செய்யப்பட்டு வருகின்றன.
இது மிகப் பெரிய சேதமாகும். எனவே கண்டிப்பாக நிலையை சரி செய்ய நேரமாகும். பல இடங்களில் சாலைகள் போர்க் கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருகின்றன. நாங்கள் நேரடியாக சென்று ஆய்வு செய்ய அதுவே உறுதுணையாக இருந்தது.
எங்களால் எல்லா இடங்களையும் நேரில் சென்று ஆய்வு செய்ய முடியாது. ஏனென்றால் ஆய்வுக்காக எங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள நேரம் மிகக் குறைவு. ஆனால் புயலால் மிகவும் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல இடங்களில் நாங்கள் ஆய்வு செய்தோம்.
ஒவ்வொருவரின் துயரையும் நம்மால் துடைக்க முடியாது. ஆனாலும், எவ்வளவு உதவி செய்ய முடியுமோ அது கிடைக்க எங்கள் குழு பாடுபடும். சில இடங்களில் பல்லாயிரம் தென்னை மரங்கள் வேறோடு சாய்ந்து கிடக்கின்றன. தென்னை என்பது விவசாயிகளுக்கு குழந்தை போன்றது. அதை நேரடியாக பார்க்கும்போது நாங்கள் உணர்ந்தோம். அவர்களுக்கு உதவி கிடைக்கப் பாடுபடுவோம். மக்களுக்கு மத்திய அரசிடமிருந்து உதவி வரும் என நம்புகிறோம்' என்று தெரிவித்தார்.