This Article is From Nov 26, 2018

கஜா புயல் சேதம்: 3வது நாளாக மத்திய குழு ஆய்வு!

கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும்

Advertisement
தெற்கு Posted by

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள், இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், மத்திய அரசால் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழு, புயல் பாதித்த இடங்களை இன்று மூன்றாவது நாளாக பார்வையிட்டு வருகிறது.

நவம்பர் 16 ஆம் தேதியன்று, நாகப்பட்டினம் - வேதாரண்யத்திற்கு இடையில் 120 கிலோ மீட்டர் வேகத்தில் கரையைக் கடந்தது கஜா புயல். இதனால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களும், தென் மாவட்டங்கள் பலவும் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஜா கோரத் தாண்டவம் ஆடியது. புயலால் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல லட்சம் மரங்கள் வேரோடு சாய்துள்ளன. பல இடங்களுக்கு ஒரு வாரம் கடந்தும், இன்னும் மின்சாரம் கொடுக்கப்படவில்லை.

கடந்த வாரம் கஜா சேதங்கள் குறித்து விளக்கி நிவாரணம் பெறும் நோக்கில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி சென்று சந்தித்தார். பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு முதல்வர், ‘கஜா புயல் காரணமாக இதுவரை 12 மாவட்டங்களில் 63 பேர் உயிரிழந்துள்ளனர். கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும்.

கஜா புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய விரைவில் மத்திய குழுவை தமிழகத்திற்கு அனுப்பி வைக்குமாறு பிரதமரிடத்தில் கோரினேன். அதற்கு உடனடியாக அது குறித்து நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மோடி கூறினார். மேலும், கஜா புயல் நிவாரண நிதியாக 15 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்துக்கு வழங்க பிரதமரிடம் கோரினேன். புயல் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள உடனடியாக 1,500 கோடி ரூபாய் பிரதமரிடத்தில் கோரப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.

Advertisement

இதையடுத்து 3 நாட்களுக்கு முன்னர் விமானம் மூலம் சென்னை வந்த மத்திய குழு, சனிக்கிழமையன்று சென்னை தலைமைச் செயலகத்துக்கு வந்தனர். அவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினர். பின்னர் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன் ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக புயல் பாதித்த இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று மூன்றாவது நாளாக மத்திய குழு, தொடர் ஆய்வில் ஈடுபட்டுள்ளது. இன்றுடன் மத்திய குழு ஆய்வை நிறைவு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மத்திய அரசுக்கு, அந்தக் குழு அறிக்கை சமர்பிக்கும். அதைத் தொடர்ந்து தான் மத்திய அரசின் நிவாரண நிதி தமிழகத்துக்கு வழங்கப்படும்.

Advertisement
Advertisement