முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளான ஏழு பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை ஆளுநர் பன்வாரிலால் புரோகிதுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில், ‘ராஜீவ் கொலை வழக்கில் அதிமுக மற்றும் பாஜக அரசியல் செய்கின்றன’ என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜெவ்லா, ‘1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புத்தூரில் நடந்தது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் பல பொது மக்களை கொலை செய்த சம்பவம். வெளிநாட்டு சதியின் மூலம் தீவிரவாதிகளால் அரங்கேற்றப்பட்ட இந்தத் தாக்குதல் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுத் தான் 7 பேர் சிறையில் இருக்கின்றனர். அதே நேரத்தில் மிகப் பெரும் மனமுடைய சோனியா, ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி, ராஜீவ் கொலை குற்றவாளிகள் மீது எந்த வெறுப்பையும் காட்டாதீர்கள் என்று தெரிவித்தனர். ஆனால், இந்த அரசு செய்வது என்ன? எது அரசின் வேலை? தீவிரவாதிகளை பிடிப்பதா அல்லது காப்பாற்றுவதா?
இது தான் இந்த அரசின் கொள்கையா? தீவிரவாதத்தில் ஈடுபட்டதாக குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களை தற்போது நாம் விடுதலை செய்யப் போகிறோமா? ராஜீவ் கொலை வழக்கை வைத்து அதிமுக மற்றும் மத்திய பாஜக அரசியல் செய்கின்றன’ என்று அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், பேரறிவாளன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிசந்திரன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 27 வருடங்களாக சிறையில் உள்ளனர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி, நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்ஹா, கே.எம்.ஜோசப் ஆகிய மூவர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
அப்போது, ‘குற்றம் சுமத்தப்பட்ட 7 பேர் குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உரிமையுண்டு. அவர்கள் ஆளுநருக்கு விடுதலை குறித்து பரிந்துரை செய்யலாம்’ என்று தெரிவித்தது. இதைத் தொடர்ந்து சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது தமிழக அமைச்சரவை.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)