நாட்டில் மக்கள் மட்டுமே தலைவர்கள் என்று மம்தா கூறியுள்ளார்.
Kolkata/New Delhi: சிபிஐ விசாரணை தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் உத்தரவை மேற்கு வங்க முதல்வர் மம்தாவும், மத்திய அரசும் வரவேற்றுள்ளன. சிபிஐ விசாரணைக்கு கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் ஒத்துழைக்க வேண்டும் என்றும், அவர் கைது செய்யப்படக் கூடாது எனவும் உச்ச நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனை மத்திய அரசும், மம்தா பானர்ஜியும் வரவேற்றுள்னர். சிபிஐ விசாரணை முன்பாக வரும் 20-ம்தேதி ராஜீவ் குமார் ஆஜராக வேண்டும் என்றும், இந்த விசாரணை மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் நடைபெறும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொன்ஸி மோசடி தொடர்பாக கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் கடந்த ஞாயிறன்று வந்தனர். அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் பிரச்னை வெடித்தது. அதன்பின்னர் சிபிஐ விசாரணையை எதிர்த்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணாவில் குதித்தார்.
மம்தாவுக்கு ஆதரவாக பல்வேறு மாநில கட்சி தலைவர்களும், முதலமைச்சர்களும் கருத்து வெளியிட்டு வருகின்றனர். மத்தியில் ஆளும் பாஜக மற்றும் அதன் ஆதரவு கட்சியினர் மம்தாவின் போக்குக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மாநிலத்தின் பல பகுதிகளில் மத்திய அரசை கண்டித்தும் மம்தாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாகவும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பை மம்தா பானர்ஜி வரவேற்றிருப்பதால் பிரச்னை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.