This Article is From Jan 10, 2019

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்பிரிவினருக்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது : 10 தகவல்

உயர் வகுப்பினராக கருதப்படும் பிராமணர்கள், ராஜபுத்திரர்கள் (தாகூர்), ஜாட், மராத்தியர்கள், பூமிஹார் உள்ளிட்ட வகுப்பினருக்கு இந்த இடஒதுக்கீடு பலன் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

10% Quota Bill: 124 -வது அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நேற்று நிறைவேறியது.

New Delhi:

கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் உயர் பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மாநிலங்களவையில் நேற்று நிறைவேறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சில அரசியல் கட்சிகள் மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக்குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தன. 
முன்னதாக இட ஒதுக்கீடு மசோதா செவ்வாயன்று மக்களவையில்  நிறைவேறியது. தற்போது இந்த மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மக்கள் ஆதரவை திரட்ட மோடி இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. ஆனால் மோடியே இது சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி என்று ட்வீட் செய்திருக்கிறார்.

இந்த செய்தி தொடர்பான 10 முக்கிய தகவல்களை பார்க்கலாம்

1. 124-வது அரசியலமைப்பு திருத்த மசோதாவாக பொருளாதாரத்தில் பின் தங்கியருக்கும் உயர் வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2. மாநிலங்களவையில் இந்த மசோதாவை ஆதரித்து 165 உறுப்பினர்களும் எதிர்த்து 7 உறுப்பினர்களும் வாக்களித்தனர். மக்களவையில் 323 உறுப்பினர்கள் ஆதரித்தும் 3 உறுப்பினர்கள் எதிர்த்தும் வாக்களித்தனர்.

3. வாக்களிப்பின்படி பார்க்கும்போது இந்த மசோதாவுக்கு மிகப்பெரும் அளவில் ஆதரவு இருப்பதை காண முடிகிறது. இதை சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் மோடி அதிர வைத்த விவாதங்கள் இட ஒதுக்கீடு மசோதா குறித்து பேசப்பட்டன. சில உறுப்பினர்கள் மிகவும் ஆழமான கருத்தை முன்வைத்தார்கள். மசோதாவுக்கு கிடைத்திருக்கும் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது என்று ட்வீட் செய்துள்ளார்.

4. மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த முக்கிய எதிர்க்கட்சிகள் அதனை ஏன் அவசர கதியில் நிறைவேற்ற வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளன.

5. வாக்கெடுப்பை புறக்கணித்து விட்டதாக ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது. அக்கட்சியின் முக்கிய தலைவர் சஞ்சய் சிங் கூறுகையில், ''ஆண்டுக்கு 8 லட்சத்திற்கும் குறைவான வருமானம் உடையவர்கள் 10 சதவீத இட ஒதுக்கீட்டை பெறுவார்கள். மற்ற உயர் பிரிவினர்கள் 40 சதவீத இட ஒதுக்கீட்டில் வருவார்கள்'' என்று கூறியுள்ளார்.

6. சாதியின் அடிப்படையில் இல்லாமல் பொருளாதாரத்தின் அடிப்படையில்தான் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

7. தேர்தல் வருவதால் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி விட்டார் என்று மோடி மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இதற்கு பதில் அளிக்கும் வகையில், ''இப்போது நிறைவேற்றாவிட்டால் பின்னர் என்றைக்கு நிறைவேற்றுவது?'' என்று மோடி பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.

8. மசோதா நாடாளுமன்ற தேர்வுக்குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளி செய்தன. இதனால் மாநிலங்களவை சிறிது நேரம் நேற்று ஒத்தி வைக்கப்பட்டது.

9. காங்கிரசின் கோரிக்கையை தமிழக எம்.பி.க்களும், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம், இடது சாரிகள் உள்ளிட்டோரும் வலியுறுத்தின. ஆனால் அகிலேஷ் யாதவ், மாயாவதி கட்சி உறுப்பினர்கள் காங்கிரஸ் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்க மறுத்து விட்டன.

10. மூன்றில் 2 பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு விட்டது. தற்போது மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

.