இன்று ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான வழக்கை, உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்.
New Delhi: ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான நிதி சார்ந்த தகவல்களை கொடுக்குமாறு சில நாட்களுக்கு முன்னர் உச்ச நீதிமன்றம், மத்திய அரசிடம் கோரியது. இதையடுத்து நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ராணுவத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் ஆகியோர், ரஃபேல் ஆவணங்களை ஒப்படைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. பேச்சுவார்த்தையின் முடிவில் உச்ச நீதிமன்றத்திடம் ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிமன்ற அமர்விடம் ஆவணங்கள், மூடிய கவர் ஒன்றில் வைத்து கொடுக்கப்பட்டுள்ளது எனவும், அதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் ஒப்புதல் இருக்கிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மாதம் 2 ஆம் தேதி, ரஃபேல் ஒப்பந்த ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருந்தது. எதிர்கட்சிகள் ரஃபேல் ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை, ‘அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்துக்கு உதவி புரியவே இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது' என்று கடுமையாக விமர்சித்து வருகின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘ரஃபேல் ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை எந்த வித வெளிப்படைத் தன்மையும் கடைபிடிக்கப்படவில்லை. அது தான் அனைத்து சந்தேகங்களுக்கும் காரணம்' என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இரண்டு மத்திய அமைச்சர்களும், அட்டர்னி ஜெனரலும், உச்ச நீதிமன்றத்திடமிருந்து ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான தகவல்களை மறைக்க வேண்டாம் என்று முடிவெடுத்ததாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. அதன் பிறகு தான் ஒப்படைப்பது குறித்தான முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இன்று ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான வழக்கை, உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்.