கலால் வரியை உயர்த்திய மத்திய அரசு: பெட்ரோலுக்கு ரூ.10, டீசலுக்கு ரூ.13. (File)
ஹைலைட்ஸ்
- கலால் வரியை உயர்த்திய மத்திய அரசு: பெட்ரோலுக்கு ரூ.10, டீசலுக்கு ரூ.13
- விலை உயர்வு மூலம் அரசுக்கு கூடுதலாக 1.6 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும்
- டெல்லியில் நேற்று முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு
New Delhi: மத்திய அரசு நேற்று மாலை இதுவரை இல்லாத அளவு பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வானது இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த விலை உயர்வு மூலம் அரசுக்கு கூடுதலாக 1.6 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக பெட்ரோலியத்துறை அதிகாரிகள் கூறும்போது, இந்த வரி உயர்வால், பெட்ரோல், டீசல் சில்லறை விற்னை விலையில் எந்த மாற்றமும் எற்படாது என்றும், கச்சா எண்ணெய் விலை குறைவில் அதனை சரி செய்து கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பெட்ரோல் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரியானது, லிட்டருக்கு ரூ.2ஆகவும், சாலை செஸ் வரி லிட்டருக்கு ரூ.8ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல், டீசலுக்கு கலால் வரி லிட்டருக்கு ரூ.5ஆகவும், சாலை செஸ் வரி லிட்டருக்கு ரூ.8ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் பெட்ரோல் மீதான கலால் வரி மொத்தமாக லிட்டருக்கு ரூ.32.98ஆகவும், டீசல் மீதான கலால் வரி ரூ.11.83ஆகவும் உயர்ந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 2014ல் பதவியேற்றபோது, பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு ரூ.9.48ஆக இருந்தது. டீசல் மீதான வரி லிட்டருக்கு ரூ.3.66 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் 2வது முறையாக மத்திய அரசு கலால் வரியை உயர்த்தியுள்ளது. முன்னதாக கடந்த மார்ச் மாதம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ரூ.3 வரை உயர்த்தியது.
கடந்த 20 வருடங்களில் இல்லாத அளவு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்திருந்தாலும், மார்ச்.16ம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றியமைக்கப்படவில்லை. தற்போது, இந்த லாபங்கள் கலால் வரி உயர்வில் சரிசெய்யப்படுகிறது.
தலைநகர் டெல்லியில் எரிப்பொருட்களுக்கான மதிப்பு கூட்டு வரியை அரசு உயர்த்தியதால், நேற்று முதல் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.1.67ம் டீசலுக்கு ரூ.7.10ம் உயர்த்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, டெல்லியில் வாடிக்கையாளர்கள் தற்போது, பெட்ரோலுக்கு ரூ.71.26, டீசலுக்கு ரூ.69.39ம் செலுத்தி வருகின்றனர்.