முன்னதாக கடந்த 2010-ல் மக்கள் தொகை பதிவேடு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது மேற்கொள்ளப்பட்டது.
New Delhi: தேசிய மக்கள் தொகை பதிவேட்டு பணியை மேற்கொள்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக ரூ. 8,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து சென்சஸ் கமிஷன், இந்திய குடிமகன்கள் குறித்த விரிவான தகவல்கள் சேகரிக்கப்பட்டு அவை தேசிய மக்கள் தொகை பதிவேட்டுடன் அப்டேட் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. பயோமெட்ரிக் முறையில் தகவல்கள் பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்சஸ் ஆணையம் குறிப்பிட்டுள்ளபடி, ஒருவர் ஒரு பகுதியில் குறைந்தது 6 மாதங்கள் தங்கியிருப்பார் என்றாலோ அல்லது அடுத்த 6 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலங்கள் ஓரிடத்தில் தங்குவார் என்றாலோ அவர் NPR எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும்.
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் தொடர்புடைய NPR நாடு முழுவதும் NRC எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை நடத்துவதற்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. NPR நடத்தப்பட்டால், அதன் பின்னர் NRC நடத்தப்படும் என்று உறுதியாக சொல்ல முடியாது. NRC யை எதிர்ப்பதால், மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்டவை NPR யை தங்களது மாநிலங்களில் நிறுத்தி வைத்துள்ளன.
National Population Register எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை ஏப்ரல் மற்றும் செப்டம்பர் 2020-ல் அசாமை தவிர்த்து மற்ற அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடத்தப்படவுள்ளது. அசாமில் ஏற்கனவே தேசிய குடிமக்கள் பதிவேட்டு பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
முன்னதாக கடந்த 2010-ல் தேசிய மக்கள் தொகை பதிவேடு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் 2011-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த 2015-ல் என்.பி.ஆர். தகவல்கள் வீடு வாரியாக சேகரிக்கப்பட்டு அப்டேட் செய்யப்பட்டன. இவை டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்ததால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் தங்களது பகுதியில் என்.பி.ஆர். நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளன.
மேற்கு வங்கத்தில், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் என்.பி.ஆர். பணிகள் மேற்கொள்ளக் கூடாது என்று முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்தத்தை மாநிலங்கள் நிராகரிக்க முடியாது என்று மத்திய அரசு கூறி வருகிறது. இந்த நிலையில் பஞ்சாப், கேரளா, மேற்கு வங்க அரசுகள் தங்களது பகுதியில் குடியுரிமை சட்ட திருத்தத்தை நிறைவேற்ற மாட்டோம் என்று கூறி வருகின்றன.
மத அடிப்படையில் இந்திய குடியுரிமையை, குடியுரிமை சட்ட திருத்தம் முதன்முறையாக தீர்மானிக்கிறது. இதன்படி, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மேற்கு வங்கத்திலிருந்து மத துன்புறுத்தல் காரணமாக முஸ்லிம் அல்லாத அகதிகள் 2015-க்கு முன்னர் இந்தியாவுக்கு வந்திருப்பார்கள் என்றால், அவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்கிறது. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும், மத ரீதியில் பாகுபாடு காட்டப்படுவதால் இது முஸ்லிம்களுக்கு எதிரானது என்றும் கூறி நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.