This Article is From Dec 25, 2019

ஜம்மு-காஷ்மீரிலிருந்து 7,000 பாதுகாப்பு படையினரை திரும்ப பெற்ற மத்திய அரசு!

மத்திய ஆயுத போலீஸ் படையை (CAPFs) சேர்ந்த 72 கம்பெனி வீரர்களை நாடுமுழுவதும் உள்ள தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்பி செல்ல உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரிலிருந்து 7,000 பாதுகாப்பு படையினரை திரும்ப பெற்ற மத்திய அரசு!

7,000க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினரை உடனடியாக திரும்ப பெற மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. (Representational)

New Delhi:

ஜம்மு-காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு மறுஆய்வுக்கு பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 7,000க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினரை திரும்ப பெற மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மத்திய ஆயுத போலீஸ் படையை (CAPFs) சேர்ந்த 72 கம்பெனி வீரர்களை நாடுமுழுவதும் உள்ள தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்பி செல்ல உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில், ஒரு கம்பெனியில் 100 வீரர்கள் இடம்பெறுவர். 

கடந்த ஆகஸ்ட் மாதம் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்த மத்திய அரசு, மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்து அதிரடியாக உத்தரவிட்டது.

இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொள்வதற்கு முன்னதாக ஜம்மு-காஷ்மீரில், சிஆர்பிஎஃப், பிஎஸ்எஃப், ஐடிபிபி, சிஐஎஸ்எஃப், எஸ்எஸ்பி உள்ளிட்ட பிரிவுகளை சேர்ந்த பாதுகாப்பு படை வீரர்கள் மாநிலம் முழுவதும் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது. 

இதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அரசியல் தலைவர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு, தொலைபேசி, இணைய சேவைகள் முடக்கப்பட்டு இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டது. 

இந்நிலையில் அங்கு படிப்படியாக இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து, அங்கு பல்வேறு தடை உத்தரவுகளும் தளர்த்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், திங்களன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவை தொடர்ந்து, மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 24 கம்பெனிகள் திரும்ப பெறப்பட்டது. தொடர்ந்து, எல்லை பாதுகாப்பு படை, இந்தோ-திபெத்தியின் எல்லை பாதுகாப்பு போலீசார் உள்ளிட்ட 12 பிரிவுகளை சேர்ந்த வீரர்களும் திரும்ப பெறப்பட்டனர். 

.