New Delhi: கேரள வெள்ள நிவாரணத்துக்காக வெளிநாடுகளில் இருந்து வரும் எந்த நிதி உதவியையும் இந்தியா ஏற்காது என்று கூறி தங்களது உதவியை மத்திய அரசு மறுத்துவிட்டதாக தாய்லாந்து தூதர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி கேரளாவைக் எரிச்சலடையச் செய்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவால் வெள்ளச் சேதங்களை மீள்கட்டமைப்பு செய்கையில் போதிய நிதி இருக்காது என கேரளா அஞ்சுகிறது. “நாங்கள் கேட்ட பணத்தை விட மிக மிக குறைவான நிதியையே கொடுக்கும் மத்திய அரசானது பிறர் உதவுவதையும் தடுப்பது சரியல்ல” என்று இதுகுறித்து கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் கருத்து தெரிவித்துள்ளார்.
“ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடிக்கான நிதி உதவியை அளிக்க முன்வந்துள்ளது. அபுதாபி இளவரசர் ஷேக் மொகம்மது பின் சயேத் நஹாயன் பிரதமர் மோடியை அழைத்து இதனைத் தெரிவித்தார் என்று முதல்வர் பிணராயி விஜயன் கூறியுள்ளார்” என்று ஏற்கனவே என்டிடிவியுடனான பேட்டியில் தாமஸ் ஐசக் கூறியிருந்தார். ஆனால் மத்திய அரசு இதனை மறுத்துள்ளது. “இதுவரை இப்படி எந்த உதவி அறிவிப்பும் வரவில்லை. வந்தாலும் இந்தியா அவ்வுதவியை ஏற்றுக்கொள்ளாது. ஏறத்தாழ பத்தாண்டுகளாக இக்கொள்கைதான் பின்பற்றப்பட்டு வருகிறது” என்று மத்திய அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்நிலையில்தான் இந்தியாவுக்கான தாய்லாந்து தூதர் சாம் கோங்சாக்டி, “இந்திய அரசு கேரள நிவாரணத்துக்காக வெளிநாட்டிடம் இருந்து நிதி உதவி பெறுவதில்லை என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரத மக்களாகிய உங்களுக்காக எமது நெஞ்சம் துடிக்கிறது” என்று ட்வீட் செய்துள்ளார். எனினும் அவரிடம் இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்தியா பொருளாதார வளர்ச்சியும் தன்னிறைவும் அடைந்ததை அடுத்து கடந்த 2004இல் சுனாமியின்போதும், உத்தராகண்ட் வெள்ளத்தின்போதும் கூட பிற நாட்டு உதவிகளை மறுத்துவிட்டது. சுனாமி ஏற்பட்டபோது, “இதனை நாமே எதிர்கொண்டு மீள முடியும் என்று நம்புகிறேன். தேவைப்பட்டால் பிறரது உதவியை ஏற்றுக்கொள்வோம்” என்று அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருந்தார்.
எனினும் உதவிகளை ஏற்பதில்லை என்னும் தற்போதைய அரசின் முடிவை கேரள நிதியமைச்சர் ஐசாக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளார். “வெளிநாட்டு உதவிகளை மறுக்கும் மத்திய அரசுக்கு எங்கள் மாநிலத்தின் மீள்கட்டமைப்புக்குத் தேவைப்படும் நிதியை அளிக்கும் திராணி இருக்கிறதா?” என்று அவர் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில் “நாங்கள் கேட்டது 2200 கோடி. மத்திய அரசால் கொடுக்க முடிந்ததோ வெறும் 600 கோடி. இந்த நிலையில் அவர்கள் ஏன் உதவும் உள்ளம் கொண்ட தனிநபர்கள், வெளிநாட்டு அரசுகளின் உதவியைத் தடுக்க வேண்டும். கேரளத்துக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்குமான (UAE) உறவு நீண்ட பாரம்பரியம் மிக்கது. சொல்லப்போனால் UAE-இல் உள்ளவர்களில் பெரும்பாலோனார் மலையாளிகளே” என்றார்.
முப்பது லட்சம் இந்தியர்கள் UAE-இல் தங்கிப் பணிபுரிந்து வருகின்றனர். அதில் 80% மலையாளிகளே என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளத்தின் கோரிக்கைகள் நிறைவேறாதா என்று ஐசக்கிடம் கேட்டபோது, “உடனடியாக உதவி தேவைப்பட்டபோது போதிய நிதி அளிக்காமல் மத்திய அரசு கைவிரித்துவிட்டது. முதலமைச்சர் நிவாரண நிதிக்கு மக்கள் பெருமளவில் கொடை அளித்ததால்தான் இப்பேரிடரை சமாளித்து வரமுடிந்தது. தற்போது உள்ள கவலை எல்லாம் வெள்ளத்துக்குப் பின்னான மீள்கட்டமைப்பு என்னும் இரண்டாம் கட்டம் பற்றித்தான்” என்று அவர் பதில் அளித்தார்.
“கேரள அரசு இதுகுறித்து ஒரு நிதித்திட்டத்தை தீட்டியுள்ளது. எங்களது கோரிக்கைகள் குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கானது. தற்போதுள்ள 3% நிதிப்பற்றாக்குறை அளவிலினை 4.5%க்கு உயர்த்துவது. இதன் மதிப்பு 20,000கோடி – 25,000 கோடியாக இருக்கும். மேலும் 2600 கோடிக்கான மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்ட பேக்கேஜினை மத்திய திட்டங்களில் ஒதுக்கீடு செய்யக் கோருவோம். உள்கட்டமைப்பு மேம்பாடு, விவசாயம், நீர்ப்பாசனம், பிற துறைகளில் நீண்ட காலத் திட்டங்களை செயல்படுத்த நபார்டிடம் (NABARD) கோருவோம்” என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார்.
கடந்த ஆண்டு பிகாரில் வெள்ளம் ஏற்பட்டபோது, 7600 கோடி ரூபாய் கோரப்பட்டது. மத்திய அரசு 1700 கோடி ரூபாய் மட்டுமே அளித்தது குறிப்பிடத்தக்கது.