ஆந்திராவில் 3 தலைநகரங்கள் ஏற்படுத்துவதற்கு தெலுங்கு தேச கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
Hyderabad: ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் அமைக்கும் மாநில அரசின் முடிவில் தலையிடுவதற்கு மத்திய அரசு மத்து விட்டது. ஆந்திராவுக்கு தலைமைச் செயலகம் விசாகப்பட்டினத்திலும், சட்டமன்றம் அமராவதியிலும், நீதிமன்ற தலைநகர் கர்னூலிலும் அமைக்கப்படும் என்று ஜெகன் மோகன் ரெட்டி கூறியிருந்தார்.
இதற்கு மாநில எதிர்க்கட்சியாக தெலுங்கு தேசம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. மாநிலத்தில் பல்வேறு அமைப்புகளும் இந்த 3 தலைநகரங்கள் அமைப்பதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் தெலுங்கு தேச எம்.பி. ஜெயதேவ் கல்லா, ஆந்திர தலைநகர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய், ‘ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் எல்லைக்குள் எப்படி வேண்டுமானாலும் தலைநகரை அமைத்துக் கொள்ளும் உரிமை உண்டு' என்று பதில் அளித்தார்.
இந்த பதிலின் மூலம் ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி அரசின் தலைநகர் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு தலையிட மறுத்திருப்பதை புரிந்து கொள்ளலாம்.
முன்பு ஆட்சியில் இருந்த சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேச அரசு ஆந்திராவுக்கு அமராவதியை தலைநகராக்கும் முயற்சியில் தீவிரம் காட்டியது. இந்த நிலையில் ஜெகன் மோகனின் 3 தலைநகர் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அக்கட்சி, இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு ஜெகன் மோகனுக்கு அறிவுரை கூற வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது.
நாடாளுமன்றத்தில் தெலுங்கு தேச எம்.பி., அமராவதி தலைநகரம் அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான விவசாயிகள் நிலத்தை அளித்துள்ளனர். அவர்கள் ஜெகன் மோகன் அரசின் முடிவால் பாதிக்கப்படுவார்கள் என்று சுட்டிக் காட்டினார். அவரது கேள்விக்கு மத்திய அமைச்சரிடமிருந்து எழுத்துப்பூர்வமாக பதில் கிடைத்துள்ளது.
அந்த பதிலில், ‘ஆந்திராவில் 3 தலைநகரங்கள் ஜெகன் மோகன் அரசு அமைக்கப்போவதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. மாநிலங்கள் தங்களது எல்லைக்குள் தங்களது தலைநகரங்களை நிர்ணயம் செய்து கொள்ளலாம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2015 ஏப்ரல் மாதத்தின்போது ஆந்திராவின் தலைநகராக அமராவதியை அப்போதைய சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேச அரசு அறிவித்திருந்தது. இதனை ரத்து செய்யும் மசோதாவை ஜெகன் அரசு மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.
இன்னொரு தனித் தீர்மானத்தில் அரசு செயலக தலைநகராக விசாகப்பட்டினமும், சட்டமன்ற தலைநகராக அமராவதியும், நீதிமன்ற தலைநகராக கர்னூலும் செயல்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் ஆந்திர சட்டமேலவையில் ஆளும் ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு மெஜாரிட்டி இல்லாததால் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்படவில்லை.
இந்த மசோதாக்கள் தேர்வுக்குழுவுக்கு செல்ல வேண்டும் என்று ஆந்திர சட்டமேலவை கூறியுள்ளது. அதே நேரத்தில் இந்த மேலவையை கலைப்பதற்கு ஜெகன் அரசு தீர்மானித்துள்ளது. தெலுங்கு தேச கட்சியின் அரசியல் காரணங்களுக்காக ஆந்திர சட்டமேலவை பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று ஜெகன் அரசு குற்றம் சாட்டியுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்னொரு தெலுங்கு தேச உறுப்பினரான விஜயவாடாவின் கேசினேனி சீனிவாஸ் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார். ஆந்திராவில் நடக்கும் 3 தலைநகரங்கள் எதிர்ப்பு போராட்டங்களை சுட்டிக் காட்டியுள்ள அவர், 3 தலைநகரங்கள் அமைப்பது பற்றி, ஆந்திர அரசு மத்திய அரசிடம் தெரிவித்ததா? அல்லது இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிடுமா என்று கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விக்கு மத்திய அமைச்சர் நித்யானந்த ராய் அளித்துள்ள பதிலில், ‘சட்டம் ஒழுங்கு என்பது மாநில விவகாரம். இதுபற்றி மாநில அரசு கேட்டுக்கொண்டால் மட்டுமே மத்திய அரசு தலையிடும். 3 தலைநகரங்கள் அமைப்பது குறித்து ஆந்திர அரசு மத்திய அரசுக்கு ஏதும் தெரிவிக்கவில்லை' என்று கூறியுள்ளார்.