This Article is From Sep 10, 2018

‘ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவான தூத்துக்குடி நிலத்தடி நீர் ஆய்வு!’- ஸ்டாலின் பாய்ச்சல்

தூத்துக்குடியில் உள்ள நிலத்தடி நீரில் எந்தளவு மாசுபட்டிருக்கிறது என்பதை அறிய மத்திய அரசு சார்பில் சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டிருப்பதாக தெரிகிறது

‘ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவான தூத்துக்குடி நிலத்தடி நீர் ஆய்வு!’- ஸ்டாலின் பாய்ச்சல்

தூத்துக்குடியில் உள்ள நிலத்தடி நீரில் எந்தளவு மாசுபட்டிருக்கிறது என்பதை அறிய மத்திய அரசு சார்பில் சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டிருப்பதாக தெரிகிறது. இந்த ஆய்வு முடிவை தற்போது வெளியிட்டுள்ள மத்திய அரசு, ‘தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசு படுவதற்கு ஸ்டெர்லைட் மட்டும் காரணமல்ல’ என்று தெரிவித்துள்ளது. இதனால் கொதிப்படைந்துள்ள தமிழக எதிர்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், ‘இந்த அறிக்கை ஸ்டெர்லைட் ஆலையைத் திரும்ப திறக்க வேண்டும் என்ற நோக்கிலேயே வெளியிடப்பட்டுள்ளது. இதை ஏற்க முடியாது’ என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் அறிக்கை மூலம் குறிப்பிட்டுள்ளதாவது, ‘தூத்துக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமில்லை” என்று மத்திய நீர்வளத்துறை, தன்னிச்சையாகத் தனது கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தடி நீர் வாரியத்தின் மூலம் ஒரு நிலத்தடி நீர் ஆய்வினை, தூத்துக்குடி பொதுமக்களின் மனநிலையை அறிந்து கொள்ளாமலும், தமிழக மக்களைக் கோபப்படுத்தும் வகையிலும், வெளியிட்டிருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு, அது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திலும் நிலுவையில் இருக்கும்போது தனியார் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக - அந்த ஆலையை திறப்பதற்கு துணை போகும் வகையில், இப்படியொரு ஆய்வை மேற்கொண்டிருப்பது தமிழக மக்களை வஞ்சிக்கும் செயலாகும். ஒரு தனியார் கார்ப்பரேட் ஆலைக்காக, ஏழரைக்கோடி மக்களின் நலனை, மத்திய பா.ஜ.க. அரசு தூக்கியெறிந்து செயல்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது.

மத்திய நிலத்தடி நீர் வாரியம் தூத்துக்குடி பகுதிகளில் நீரினை ஆய்வு செய்யும் போது, உளவுத்துறை மூலமாக அறிந்திருந்தும், அதை வேடிக்கை பார்த்து விட்டு, இப்போது மத்திய அரசின் அறிக்கை வெளிவந்த பிறகு - ஏதோ தங்களுக்குத் தெரியாமல் ஆய்வு நடந்து விட்டது போல் ஒரு கபட நாடகத்தை அரங்கேற்றி, மாநில தலைமைச் செயலாளர் பெயரில் அந்த அறிக்கையை எதிர்க்க வைத்திருப்பது அ.தி.மு.க அரசுக்கும் - மத்திய பா.ஜ.க. அரசுக்கும் தனியார் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதில், உள்நோக்கத்துடன் திரைமறைவுக் கூட்டணி வைத்துள்ளன என்பது தெரிகிறது.

ஆகவே, சுற்றுப்புறச்சூழலுக்கும், சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகளுக்கும் காரணமாக இருக்கும் ஸ்டெர்லைட் ஆலை குறித்த “அதிகாரத்துடன் ஆணவத்தையும் துணைக்கு அழைத்துக் கொண்டு” தயாரித்துள்ள ஒரு “நீர் ஆய்வு” அறிக்கையை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அ.தி.மு.க அரசு அதிகாரிகள் மூலம் கடிதம் எழுதி எதிர்ப்புத் தெரிவிப்பதை விடுத்து, உடனடியாக இந்த ஆய்வு அறிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தடை பெற்றிட வேண்டும் என்றும்; அந்த அறிக்கையை அமைச்சரவைக் கூட்டத்தில் நிராகரித்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

.