This Article is From Mar 23, 2020

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வர்த்தக துறைகளுக்கு சலுகை அளிக்கிறது மத்திய அரசு!!

அமெரிக்கா பொருளாதாரத்தை சரி செய்வதற்காக அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் ட்ரில்லியன் டாலர் அளவுக்கு சலுகைகளை அறிவித்தார். இது டெமாக்ரடிக் கட்சியினரால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைப் போன்று இந்தியாவும் தொழில்துறைக்கு சிறப்பு சலுகைகளை வழங்கலாம்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வர்த்தக துறைகளுக்கு சலுகை அளிக்கிறது மத்திய அரசு!!

நேற்று நாடு முழுவதும் ரயில்கள், மெட்ரோ உள்ளிட்டவை நிறுத்தப்பட்டுள்ளன. நாளை முதல் தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது.

ஹைலைட்ஸ்

  • கொரோனா வைரஸால் இந்திய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது
  • இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு குறித்து மத்திய அரசு ஆய்வு
  • பாதிப்புக்கு ஏற்ப தொழில் துறைக்கு சலுகைகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது

கொரோனா வைரஸால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இழப்பை சந்தித்து வரும் பல்வேறு நிறுவனங்களுக்கு மத்திய நிதித்துறை அமைச்சகம் சலுகைகளை அளிக்கவுள்ளது. 

4 நாட்களுக்கு முன்பாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனாவால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகளை சரி செய்வதற்கு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான குழு தீவிரவமாக பணியாற்றி வருகிறது என்று தெரிவித்திருந்தார். 

ஏற்கனவே கொரோனா நிவாரணத்திற்காக பெரு நிறுவனங்கள் ஒதுக்கும் நிதி சி.எஸ்.ஆர். எனப்படும் கார்ப்பரேட்டுகளில் சமூக பொறுப்புளுக்கு ஒதுக்கும் நிதியாக கருதப்படும் என்று நிதியமைச்சர் கூறியிருந்தார். 

இதுகுறித்து அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில், 'கொரோனாவை தொற்று நோயாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்காக கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒதுக்கும் நிதி சி.எஸ்.ஆர். நிதியாக கருதப்படும்' என்று தெரிவித்திருந்தார். இதேபோன்று செபி மற்றும் ரிசர்வ் வங்கியின் விதிகளும்  தளர்த்தப்பட்டிருந்தன. 

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்துறை நிறுவனங்களுக்கு மத்திய அரசு சலுகைகள் அளிக்கவுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில், உலகம் முழுவதும் கொரோனாவால் தொழில்கள் நலிவடைந்துள்ளன. ஆனால், இந்தியாவில் அதன் பாதிப்புகள் இன்னும் மதிப்பிடப்படவில்லை. 

விமான நிறுவனங்கள் முதல் சிறு குறு தொழில்கள் வரை கொரோனா அனைத்தையும் பாதித்திருக்கிறது. இந்த நிலைமை சீரடைவதற்கு எத்தனை வாரங்கள், மாதங்கள் ஆகுமென்று தெரியவில்லை. 

அமெரிக்கா பொருளாதாரத்தை சரி செய்வதற்காக அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் ட்ரில்லியன் டாலர் அளவுக்கு சலுகைகளை அறிவித்தார். இது டெமாக்ரடிக் கட்சியினரால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைப் போன்று இந்தியாவும் தொழில்துறைக்கு சிறப்பு சலுகைகளை வழங்கலாம்.

இந்திய நாடாளுமன்றத்திலும், தொழில் துறையினருக்கு மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் குரல் கொடுத்தது. ஆனால் இன்றைக்கு நிதி மசோதா நிறைவேற்றப்படும் என்பதால் காங்கிரஸின் கோரிக்கையை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்கவில்லை. 

தலைநகர் டெல்லி உள்பட நாட்டில் சுமார் 60 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பால் வீட்டில் முடங்கியுள்ளனர். 415 பேருக்கு இந்தியாவில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 7 பேர் உயிரிழந்துள்ளார்கள். 

நேற்று நாடு முழுவதும் ரயில்கள், மெட்ரோ உள்ளிட்டவை நிறுத்தப்பட்டுள்ளன. நாளை முதல் தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது.

.