குஜராத்தில், இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் 182 உயர் சிலை ஒன்று மிக வேகமாக உருவாக்கப்பட்டு வருகிறது. 2,500 தொழிலாளர்கள், 5000 செப்புத் தகடுகள் பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அலகாபாத்தில் இருந்து 250 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த சிலையில், 153 வது அடி உயரத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் பார்வைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். இந்த சியை உருவாக்க ஆகும் செலவு மட்டும் 2,990 கோடி ரூபாய். அக்டோபர் 31-ம் தேதி இந்த சிலை பிரதமர் மோடியால் திறக்கப்பட உள்ளது.
தனது பிரச்சாரங்களில் பல முறை சர்தார் வல்லபாய் படேலை உயர்த்திப் பேசிய பிரதமர் மோடி, வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் குஜ்ராத் மக்களை கவர இந்த சிலையை உருவாக்கி வருவதாக கருதப்படுகிறது.
சர்தார் வல்லபாய் படேல், சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமர் ஆவார். நேருவின் அரசாங்கம் படேலின் புகழை திட்டமிட்டு மறைத்துவிட்டதாக பா.ஜ.க குற்றம் சாட்டியுள்ளது. “சர்தார் வல்லபாய் படேல், பிரதமராகவில்லையே என ஒவ்வொரு இந்தியனும், வருந்துகிறான்” என மோடி பிரச்சாரத்தில் கூறியிருக்கிறார்.
படேலின் சிலையை மிஞ்சுகிறது, மஹாராஷ்டிராவில் அமைய உள்ள மஹாராஜா சத்திரபதி சிவாஜி சிலை. 212 மீட்டரில் அமைய உள்ள சிலைக்கு, ஆகப்போகும் செலவு 3,600 கோடி ரூபாய். மஹாராஷ்டிரா மக்களின் வாக்குகளைப் பெறவே இந்த சிலையை அமைக்க இருப்பதாக, எதிர்ப்பாளர்கள் விமர்சித்தனர்.
இந்த இரண்டு சிலைகளுக்கும் ஆகும் செலவு 6,590 கோடி ரூபாய். காலம் போக செலவு அதிகரிக்கும் எனவும் கருதப்படுகிறது. இவர்களின் சிலை அரசியலுக்கு, இந்திய மக்களின் பொருளாதாரத்துடன் விளையாடுகின்றனர், என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்