ஹைலைட்ஸ்
- இது குறித்து என்டிடிவி புலனாய்வு செய்து தகவலை வெளிகொண்டு வந்துள்ளது
- 2014 முதல் இந்த விஷயத்தில் அரசு மும்முரம் காட்டியுள்ளது
- இது குறித்து உச்ச நீதிமன்றம் அரசை சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது
New Delhi: பாஜக தலைமையிலான மத்திய அரசு பதவியேற்றதிலிருந்து 7 முறையாவது தனி நபர் சமூக வலைதள கணக்குகளை ஊடுருவிப் பார்க்க முயன்றுள்ளது தெரியவந்துள்ளது.
2014 முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் குறைந்தபட்சம் 7 முறையாவது தனி நபர் சமூக வலைதள கணக்குகளை மத்திய அரசு வேவு பார்க்க முயன்றுள்ளது. என்டிடிவி நடத்திய ஒரு புலனாய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், சமூக வலைதளங்களை ஊடுருவிப் பார்க்க அரசு சார்பில் ஒரு டெண்டர் விடப்பட்டது. இது குறித்து வெளியே தெரியவே, உச்ச நீதிமன்றத்தில் அரசுக்கு எதிராக மனுத் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கவே, வேவு பார்க்கும் திட்டத்தை கைவிட்டது மத்திய அரசு.
அதேபோல ஜூலை 18 ஆம் தேதி ஆதார் அமைப்பு சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் ‘ஆதார் குறித்து எதிர்மறை தகவல்களை பகிர்வதை கண்காணிக்க’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களை வேவு பார்க்க டெண்டர் வெளியிட்டப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கைக்க எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. வரும் வெள்ளிக் கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.
ஆனால், இது வெறுமனே இரண்டு முறை நடக்கவில்லை என்றும், 2014 ஆம் ஆண்டிலிருந்து இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுகிறது என்றும் என்டிடிவி கண்டுபிடித்துள்ளது.
முதன்முறையாக கடந்த 2014 ஆம் ஆண்டு, டிசம்பர் 1 ஆம் தேதி, வெளியுறவுத் துறை அமைச்சகம், வேவு பார்க்கும் நோக்கில் ஒரு டெண்டர் வெளியிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து தகவல் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் சார்பில் 2015, டிசம்பர் 3 ஆம் தேதி ஒரு டெண்டர் வெளியிடப்பட்டது. அதில், ‘தனி நபர் சமூக வலைதள கணக்குகளை’ நோக்குவதற்கு என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் அடுத்தடுத்து 2016 பிப்ரவரி 5 ஆம் தேதியும், 2017 ஜூலை 10 ஆம் தேதியும், ‘சமூக வலைதளங்களை ட்ரெண்டிங் ஆகும் விஷயங்களை பார்ப்பதற்கு’ என்று கூறி டெண்டர்களை வெளியிட்டது.
2016 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் தேதி, தகவல் தொழில்நுட்பம் அமைச்சகம் சார்பில், ‘எதிர்மறை கருத்துகளை வலுவிழக்க வைப்பதற்கான திட்டம்’ என்று குறிப்பிடப்பட்டு ஒரு டெண்டர் வெளியிடப்பட்டது.
இது குறித்து தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்திடம் பேசினோம். அவர்கள் கேள்விக்கு சரிவர பதில் கூறவில்லை.
அரசு தற்போதைக்கு இந்த வேவு பார்க்கும் விஷயத்தில் பின்வாங்கி இருந்தாலும், தொடர்ந்து முயற்சி செய்வதன் மூலம், வேவு பார்க்கும் எண்ணம் அதற்கு அதிகமாக இருப்பதை சுட்டிக் காட்டுகிறது என்று துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.