தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல சுழற்சி காரணமாக மேலும் தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வானிலை மையம் வெளியிட்டு அறிவிப்பில், தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருவண்ணாமலை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
வட கடலோர தமிழகம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். கோவை, நீலகிரி, திருப்பூர், கரூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்படியாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் 15 சென்டி மீட்டர் மழையும், கோவை சோலையார், வேலூர் அம்முண்டி தலா 14 சென்டி மீட்டர் மழையும், திருப்பூரில் 13 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது.
அடுத்த 5 நாட்களுக்கு தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கடும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.