தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கி உள்ளது. இதையொட்டி தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்து வருகிறது. ஆனால் இதர மாவட்டங்களில் வறட்சியே நீடிக்கிறது.
இந்த பகுதிகளை சேர்ந்த மக்கள், மழையை எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். இதில், சென்னை கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் தவிக்கிறது. நிலத்தடி நீர் மட்டமும் குறைந்துவிட்டதால், மழையை நம்பியே சென்னை மக்கள் இருக்கின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் ஆறுதல் தகவலை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள தகவலில் கூறியுள்ளதாவது,
வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று ஆகியவற்றின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட வட தமிழகத்தில் அனல் காற்று வீசும். எனவே காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை சூரியனின் வெப்ப கதிர்கள் தங்கள் மீது நேரடியாக படும்படி வெளியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்கவேண்டும். கடல் காற்று வீசத் தொடங்கிய பின்னர் தான் வட மாநிலங்களில் வீசும் அனல் காற்று படிப்படியாக குறையும்.
சென்னையை பொறுத்தமட்டில் வானம் பகுதியாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 105 டிகிரி ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 88 டிகிரி ஆகவும் பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.