தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. அதற்கு பிறகு வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த நான்கு நாட்களாக வெப்ப காற்றும் வீசியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் பகலில் மாலை 4 மணி வரை வெளியில் வர வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விட்டது.
இந்நிலையில், வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெப்பச்சலனம் காரணமாக கோவை, ஈரோடு, திண்டுக்கல், தேனி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள் மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திற்கு காற்று வீசக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் பிளவக்கல் பகுதியில் 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. தேனி மாவட்டம் பெரியார், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது என தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், அதிகபட்சமாக 100 டிகிரி வெப்பம் பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் இன்று வெப்பம் அதிகமாக பதிவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.