இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் என்றும் அந்த காற்றழுத்த பகுதியானது அடுத்த 36 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று புயல் சின்னமாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பல இடங்களிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் மழை இல்லை என்றாலும், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
அடுத்த 48 மணி நேரத்தில் இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும். அந்த காற்றழுத்த பகுதியானது அடுத்த 36 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று புயல் சின்னமாக மாற வாய்ப்பு உள்ளது
இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது தமிழக கடற்கரையை நோக்கி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நாளை முதல் தென்மேற்கு வங்கக்கடல் பகுதி, இந்திய பெருங்கடல் உள்ளிட்ட பகுதியில் 30 - 40 கிமீ வேகத்தில் காற்று வீசக் கூடும். நாளை மறுநாள் 40 -50 கிமீ வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, வருகிற 28ம் தேதி முதல் தென் கடலோர தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, 29ம் தேதி உள் தமிழகம் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், அதிகபட்ச வெப்பநிலையாக 36டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.