தேர்தலில் வெற்றி பெறுவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய மோடி தயாராக இருக்கிறார், சந்திரபாபு
Amaravati: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிரதமர் நரேந்திர மோடியை ஒரு வெற்று நபர் என்றும், நாட்டுக்காக ஒன்றும் செய்யாதவர் என்றும் விமர்சித்துள்ளார்.
மோடி குறித்து சந்திரபாபு பேசுகையில், ‘நாடாளுமன்றத்தில் மோடி தலைமையிலான அரசு, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக உறுதியளித்தது. ஆனால், அந்த கோரிக்கையை நிறைவேற்றவே இல்லை மோடி.
பிரதமர் மோடி, குஜராத்தின் முதல்வராக 12 ஆண்டுகள் பதவி வகித்தார். 4 ஆண்டுகளாக இந்தியாவுக்கு பிரதமராக இருக்கிறார். ஆனால், இதுவரை குஜராத்திற்கோ, இந்தியாவுக்கோ அவர் ஒன்றும் செய்ததில்லை. ஆனால், பெரும் காரியங்களைத் தான் செய்தது போல பிம்பத்தை அவர் உருவாக்கி வைத்துள்ளார்.
நாம் எல்லோரும் அவரை நம்பினோம். மொத்த தேசமும் அவரை நம்பியது. ஆனால், நாம் எல்லோரும் ஏமாற்றப்பட்டோம். ஒரு தலைவன் சொல்வதை எல்லோரும் நம்புவார்கள். அவரை நாம் நம்பினோம். இப்போது ஏமாற்றப்பட்டு நிற்கிறோம். மோடி ஒரு வெற்று மனிதர்.
ஆனால், அவர் தொடர்ந்து, ‘என்னைப் போல ஒரு தலைவனைப் பார்க்க முடியாது' என்று பிரசாரம் செய்து வருகிறார். உண்மை நிலை என்ன என்பது நமக்கு நன்றாகத் தெரியும்.
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய மோடி தயாராக இருக்கிறார். நாட்டைக் குறித்துப் பேச மோடிக்கு எந்தத் தகுதியும் கிடையாது. குஜராத்தின் தனி நபர் வருமானத்தை விட, தெலங்கானாவில் தனி நபர் வருமானம் அதிகமாக இருக்கிறது. அப்படியென்றால், அவர் 12 ஆண்டுகளாக முதல்வராக இருந்து என்ன சாதித்தார். கூடிய விரைவல் ஆந்திராவும், குஜராத்தை முந்தும்' என்று கூறியுள்ளார்.