ஒருநாள் உண்ணா விரதத்தை சந்திரபாபு நாயுடு மேற்கொள்கிறார்.
New Delhi: ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உண்ணா விரதத்தை டெல்லியில் தொடங்கியுள்ளார். கருப்புச் சட்டை அணிந்தவாறு அவருடன் கட்சி எம்எல்ஏக்களும், நிர்வாகிகளும் உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் கடந்த 2014-ல் பிரிக்கப்பட்டது. அப்போது ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என மத்திய அரசு தரப்பில் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. ஆனால் அவை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேச கட்சி இடம்பெற்றிருந்தது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததை கண்டித்து சந்திரபாபு நாயுடு கூட்டணியை விட்டு வெளியேறினார்.
இந்த நிலையில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி சந்திரபாபு நாயுடு டெல்லியில் உண்ணா விரதம் மேற்கொண்டு வருகிறார். காலை 8.30-க்கு மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று அங்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சந்திரபாபு நாயுடுவுடன் தெலுங்கு தேச கட்சி எம்.எல்.ஏக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாணவர் அமைப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். இந்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் பலவும் ஆதரவு தெரிவித்துள்ளன.