This Article is From Nov 01, 2018

மக்களவை தேர்தல் கூட்டணி: ராகுல் காந்தியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

3 மாதங்களுக்கு முன்பாக பாஜக கூட்டணியில் இருந்து விலகிய சந்திரபாபு நாயுடு தெலங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளார்

ராகுல் காந்திக்கு இளஞ்சிவப்பு வண்ண பட்டுப் புடவையையும், சிறிய வீணையையும் சந்திரபாபு நாயுடு பரிசாக அளித்துள்ளார்.

New Delhi:

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் இன்று சந்தித்து பேசினார். கடந்த பல ஆண்டுகளாக எதிர் எதிர் அணியில் இருவரும் இருந்த நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

ராகுல் காந்தி உடனான சந்திப்பு குறித்து சந்திரபாபு நாயுடு அளித்த பேட்டியில் “ ஜனநாயக நெறிமுறைகளைக் காக்க இந்த கூட்டணி அவசியம் ஆகியுள்ளது” என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், “எங்கள் இருவருக்கும் மோசமான அனுபவங்கள் கடந்த காலத்தில் இருக்கின்றன. அதைப் பற்றி நாங்கள் பேச விரும்பவில்லை. எங்களது இப்போதைய குறிக்கோள் பாஜக-வை வீழ்த்துவதான். நாங்கள் எதிர்காலத்தை பற்றித்தான் பேச விரும்புகிறோம்” என்றார்.

2014-ல் ஆந்திராவில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டபோது அதற்கு சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

கடந்த 30 ஆண்டுகளாக ஒவ்வொரு தேர்தலின்போதும் காங்கிரசும், தெலுங்கு தேச கட்சியும் எதிர் எதிர் முகாமில் இருந்து வருகின்றன. காங்கிரசை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகத்தான் சந்திர பாபு நாயுடுவின் மாமானரும், பிரபல நடிகருமான என்.டி.ராமா ராவ் தெலுங்கு தேச கட்சியை தொடங்கினார்.

அதில் வெற்றி பெற்ற என்.டி. ராமாராவ், கடந்த 1983-ல் முதல்வராக பொறுப்பேற்றார். காங்கிரஸ் அல்லாத ஒருவர் முதல்வராக பொறுப்பேற்றது அதுதான் முதன்முறை.

அதன் பின்னர் தொடர்ச்சியாக காங்கிரசுக்கு எதிர் அணியில் தெலுங்கு தேசம் இருந்து வருகிறது. ராகுல் காந்தி உடனான சந்திரபாபு நாயுடுவின் சந்திப்பு தேசிய அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

முன்னதாக ராகுலை சந்தித்தபோது இளஞ்சிவப்பு வண்ண பட்டுப் புடவையையும், சிறிய வீணை ஒன்றையும் சந்திரபாபு நாயுடு பரிசாக அளித்தார்.

.