This Article is From Jun 21, 2019

“வில் பி பேக்!”- 4 எம்.பி-க்கள் பாஜக-வுக்குத் தாவியதை அடுத்து பன்ச் கொடுத்த சந்திரபாபு!

ஆந்திராவில் மொத்தமுள்ள 25 நாடாளுமன்றத் தொகுதிகளில் 22-ஐ ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கைப்பற்றியது

“வில் பி பேக்!”- 4 எம்.பி-க்கள் பாஜக-வுக்குத் தாவியதை அடுத்து பன்ச் கொடுத்த சந்திரபாபு!

"எங்கள் கட்சியில் லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள். கோடிக்கணக்கான தெலுங்கு மக்கள் எங்கள் பின்னால் உள்ளனர்"

ஹைலைட்ஸ்

  • Four of TDP's six Rajya Sabha lawmakers joined the BJP today
  • Chandrababu Naidu is currently in Europe with his family
  • TDP quit NDA last year over special category status for Andhra Pradesh
Amaravati:

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலங்களவை எம்.பி-க்கள் 4 பேர் பாஜக-வில் இணைந்துள்ளனர். இது அக்கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. நேற்று மாலை துணை குடியரசுத் தலைவரும், மாநிலங்களவை சபாநாயகருமான வெங்கையா நாயுடுவை நேரில் சந்தித்து தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்கள் ராஜினாமா கடிதத்தை அளித்தனர். இந்நிலையில் இந்த கட்சித் தாவல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு. 

ஒய்.எஸ். சவுத்ரி, சி.எம். ரமேஷ், கரிகாபோடி மோகன் ராவ், டி.ஜே. வெங்கடேஷ் ஆகிய 4 தெலுங்கு தேசம் எம்.பி-க்கள் ராஜினாமா கடிதத்தை அளித்திருக்கின்றனர். துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவை எம்.பி-க்கள் சந்தித்தபோது பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டா உடன் இருந்தார். 

மாநிலங்களவையில் மொத்தம் 245 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தற்போது 102 உறுப்பினர்கள் இருக்கின்றனர். மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு மாநிலங்களவையில் மூன்றில் 2 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இதனால் மாநிலங்களவை உறுப்பினர்களை அதிகமாக்குவதில் பாஜக ஆர்வம் காட்டி வருகிறது. 

எம்.பி-க்கள் கட்சி தாவியது குறித்து பேசியுள்ள சந்திரபாபு நாயுடு, “நாங்கள் பாஜக-விடம் போராடியது எல்லாம் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வாங்க வேண்டும் என்பதற்காகத்தான். அதற்காக மத்திய அமைச்சர் பதவியை தூக்கியெறிந்தவர்கள் நாங்கள்.

எங்கள் கட்சியில் லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள். கோடிக்கணக்கான தெலுங்கு மக்கள் எங்கள் பின்னால் உள்ளனர். வரலாறு மீண்டும் மெய்பிக்கப்படும். எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். தெலுங்கு தேசம் வில் பி பேக்” என்று கருத்து கூறியுள்ளார்.

மோடி தலைமையில் முதன்முறையாக பாஜக ஆட்சி அமைந்தபோது, அந்தக் கூட்டணியில் அங்கம் வகித்தவர் சந்திரபாபு நாயுடு. ஆனால், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கவில்லை என்று கோரி கூட்டணியை முறித்துக் கொண்டார் நாயுடு. அதைத் தொடர்ந்து பாஜக-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் அவர் இறங்கினார். ஆனால், தேர்தல் முடிவுகள் தெலுங்கு தேசம் கட்சிக்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது. 

ஆந்திராவில் மொத்தமுள்ள 25 நாடாளுமன்றத் தொகுதிகளில் 22-ஐ ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கைப்பற்றியது. சந்திரபாபுவின் மகனான நர லோகேஷ், தான் போட்டியிட்ட தொகுதியிலும் படுதோல்வியடைந்தார்.

இந்நிலையில் அவரை கட்சியின் அடுத்த தலைவராக ஆக்கும் முயற்சி நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு கட்சிக்குள்ளேயே பெரும் எதிர்ப்பு இருப்பதாகவும், இதனால், கட்சி பிளவுபட வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 


 

.