New Delhi: மத்தியில் ஆட்சி புரிந்து வரும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப் போகிறது.
வரும் பருவ கால நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது, தெலுங்கு தேசம் கட்சி, மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது டெல்லி வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது ஒன்றாக இருந்த பாஜக - தெலுங்கு தேசம் கூட்டணியில், இந்த ஆண்டு மார்ச் மாதம் விரிசல் ஏற்பட்டது.
‘ஆந்திர பிரதேசத்துக்கு சிறப்புப் பொருளாதார அந்தஸ்து தருவதாக மத்திய அரசு எனக்கு உறுதியளித்தது. ஆனால், தொடர்ந்து எங்கள் கோரிக்கையை அவர்கள் புறக்கணித்தனர். எனவே, இனியும் அவர்களுடனான கூட்டணியில் தொடர முடியாது’ என்று கூறி பாஜக-வுடனான கூட்டணியைத் துண்டித்தார் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு.
இந்தக் கூட்டணி விரிசலையடுத்து, நாடாளுமன்றத்தில் தெலுங்கு தேசம் சார்பில், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து லோக்சபாவில் அமளி நடந்து வந்ததால், தீர்மானம் கொண்டு வர முடியாமல் போனது. எனவே, வரும் பருவ கால நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போது நம்பிக்கையில்லா தீர்மானத்தை தெலுங்கு தேசம் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.