Election in Telangana: வரும் 7 ஆம் தேதி தெலங்கானாவில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது
Hyderabad: தெலங்கானாவில் தேர்தல் நடக்க இன்னும் ஒரு சில நாட்களே இருப்பதால், அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரும் அம்மாநில முதல்வருமான சந்திரசேகர் ராவ் (K Chandrasekhar Rao) , ‘ராகுல் காந்தி ஒரு கோமாளி போல பேசுகிறார்' என்று சர்ச்சைக்குரிய வகையில் உரையாற்றியுள்ளார்.
அவர் ஐதராபாத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் பேசியபோது, ‘ராகுல் காந்திக்கு அறிவு இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. அவருக்கு கடவுள் அறிவைக் கொடுத்திருக்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால், அவர் ஒரு கோமாளி போலத் தான் பேசுகிறார்.
உங்களது வாழ்க்கைப் போல எங்கள் வாழ்க்கை இல்லை ராகுல். எங்களின் வாழ்க்கை, போராட்டத்தின் வாழ்க்கை. எங்களுக்குத் தேவையானதை பாடுபட்டு நாங்களே அதைத் திட்டங்களாக செயல்படுத்திக் கொள்கிறோம்' என்று பேசினார்.
சமீபத்தில் நடந்த தெலங்கானாவில் நடந்த பிரசாரத்தின்போது ராகுல், ‘பிரதமர் நரேந்திர மோடியும், முதல்வர் சந்திரசேகர் ராவும், கள்ள முதலாளித்துவத்தை தெலங்கானாவில் ஊக்குவித்து வருகின்றனர். அவர்கள் விவசாயிகளின், பழங்குடியினரின் உரிமைகளை மறுத்து வருகின்றனர்.
சந்திரசேகர் ராவின் ஒரே வேலை, காங்கிரஸ் கொண்டு வந்த பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி, அதற்கு நிதியை உயர்த்துவது தான். மாநில மக்களின் வளர்ச்சியைப் பொருட்படுத்தாமல், ராவ், தனது குடும்பத்தின் வளர்ச்சிக்காகத் தான் பாடுபட்டு வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த அத்தனைத் திட்டங்களையும் வெளிப்படையாக ஆதரித்தவர் ராவ். பணமதிப்பிழப்புத் திட்டத்தைக் கூட அவர் பாராட்டினார் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. அவரது கட்சியான டி.ஆர்.எஸ்-ஐ, டி.ஆர்.எஸ்.எஸ் என்று பெயர் மாற்றிக் கொள்ள வேண்டும். தனது குடும்பம் தெலங்கானாவை ஆட்சி செய்ய வேண்டும், மோடி டெல்லியில் ஆட்சி செய்ய வேண்டும் என்பது தான் சந்திரசேகர் ராவின் எண்ணம். ஆனால், அவர்கள் இருவருக்கும் நேரம் முடிந்துவிட்டது' என்று பேசினார்.
இந்தப் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான், தெலங்கானா முதல்வர் (K Chandrasekhar Rao) பேசியுள்ளார்.